தொடர் விடுமுறை., கிடுகிடுவென உயர்ந்த உள்ளூர் விமான டிக்கெட் விலை.!  

Chennai Airport

சென்னை : சுதந்திரதினம் உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து செல்லும் உள்ளூர் விமான டிக்கெட் விலை தற்போது கடுமையாக ஏற்றம் கண்டுள்ளது.

நாளை ஆகஸ்ட் 15 (வியாழன்) சுதந்திரதின பொது விடுமுறையை அடுத்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என அடுத்தடுத்த நாட்களில் பெரும்பாலான நிறுவனங்கள்,  கல்வி மையங்களில் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், தலைநகர் சென்னையிலிருந்து பணிபுரியும் தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இம்மாதிரியான தொடர் விடுமுறை நாட்களில் பேருந்து, ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். இந்த தொடர் விடுமுறை சமய கூட்ட நெரிசலைக் கணக்கில் கொண்டு சில தனியார் பேருந்துகளில் கணிசமான அளவில் பேருந்து கட்டணம் உயர்ந்து காணப்படும்.

அதே போல, விமான நிறுவனங்களும் தற்போது தொடர் விடுமுறை தினத்தில் தங்கள் உள்ளூர் விமான டிக்கெட் கட்டணங்களை இரண்டு மடங்கு, சில ஊர்களுக்கு மும்மடங்கு வரையில் உயர்த்தி சொந்த ஊர் செல்ல உள்ள மக்களுக்கு சிறிய அதிர்ச்சியை அளித்துள்ளன.  சென்னையிலிருந்து தென் தமிழகம், மேற்கு மண்டலம் செல்லும் விமானங்களின் விமான டிக்கெட் கட்டணம் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.

இந்த விமான டிக்கெட் கட்டணத்தைத் தனியார் விமான டிக்கெட் முன்பதிவு தளமான Skyscanner மூலம் நாம் அறிந்து கொண்ட விவரத்தின் படி, சென்னையிலிருந்து தூத்துக்குடி, மதுரை, கோவை, சேலம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் உள்ளூர் விமான டிக்கெட் விவரங்கள் இதோ…

சென்னை முதல் தூத்துக்குடி :

சாதாரண நாட்களில் விமான டிக்கெட் விலை ஏறக்குறைய 3,700 ரூபாயாக உள்ளது. ஆனால் இந்த சுதந்திர தின விடுமுறை தினத்தில் ரூ.9,500 முதல் ரூ.11,000 வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை முதல் மதுரை :

சாதாரண நாட்களில் விமான டிக்கெட் விலை 3,700 ரூபாயாக உள்ளது. தொடர் விடுமுறையை முன்னிட்டு 8,500 ரூபாயிலிருந்து 13,000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை முதல் கோவை :

சாதாரண நாட்களில் தோராயமாக 3,000 ரூபாயாக இருந்த விமான டிக்கெட் விலை தற்போது விடுமுறை தினத்தில் 8000 ரூபாய் முதல் 9000 ரூபாய் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை முதல் சேலம் :

சாதாரண நாட்களில் 2,700 ரூபாய் முதல் 3100  ரூபாயாக உள்ளது. தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று அதிகபட்சமாக 15,000 ரூபாயாகவும், நாளை தோராயமாக 8,500 ரூபாய் வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட விமான டிக்கெட் விலை விவரங்கள் Skyscanner விமான டிக்கெட் முன்பதிவு தளத்திலிருந்து கணக்கிடப்பட்ட தோராய மதிப்பீடு ஆகும்.

இதுபோல, தொடர் விடுமுறையை முன்னிட்டு இந்தியா முழுக்கவும் குறிப்பிட்ட பகுதிகளில் இதுபோல சொந்த ஊர் செல்வதற்கும், வெளியூர் செல்வதற்கும் கணிசமான அளவில் உள்ளூர் விமான டிக்கெட் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்