வரலட்சுமி விரதம் 2024- அஷ்டலட்சுமிகளை வீட்டிற்கு அழைக்கும் வழிபாட்டுமுறைகள் ..!
Chennai-வரலட்சுமி நோன்பை கடைபிடிக்கும் முறை , அஷ்டலட்சுமிகளை வீட்டிற்கு அழைக்கும் முறை மற்றும் அதன் வரலாற்று சிறப்புகள் ..
ஆடி மாதம் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் 16 வகை செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். எந்த ஒரு பண்டிகைக்கும் வழிபாட்டிற்கும் ஒரு வரலாறு இருக்கும் அதனை தெரிந்து கொண்டு வழிபாடுகளை செய்யும் போது முழு பலனையும் பெற முடியும் , அப்படி வரலட்சுமி விரதம் கடைப்பிடித்ததற்கான வரலாற்றை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்..
வரலட்சுமி நோன்பின் வரலாறு;
சௌராஷ்டிர தேசத்தில் பத்ரசவா என்ற அரசன் மிகவும் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தார் அவரது மனைவி கசந்திரிக்கா கணவருக்கு ஏற்றவராக விளங்கினார் .அவர்களுக்கு சியாமா என்ற பெண் குழந்தை இருந்தது ,தினமும் கசந்திரிக்கா லட்சுமி பூஜையை செய்யாமல் உணவருந்த மாட்டார், இதனைப் பார்த்த லட்சுமி தேவி மனம் குளிர்ந்து ஆடி வெள்ளி நாளில் வயதான சுமங்கலி பெண்ணாக அரசவைக்கு வருகிறார். அப்போது கசந்திரிக்கா உணவறிந்து விட்டு தாம்பூலத்தை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.
அங்கு வந்த சுமங்கலி தாயை வரவேற்று வெற்றிலை, பாக்கு, குங்குமம், மஞ்சள் போன்ற மங்களப் பொருட்களை கொடுக்கிறார் அப்போது லட்சுமிதேவி நீ வணங்கும் லட்சுமி தேவியின் அவதார நாளான இன்று நீ எப்படி வயிறார சாப்பிட்டு தாம்பூலம் கொடுப்பாய் என கேட்கிறார். எப்போதும் கோபம் அடையாத கசந்திரிக்கா அன்று கோபத்துடன் நீ யாரோ பிச்சைக்காரி எனக்கு புத்தி சொல்கிறாயா என அன்னையை கன்னத்தில் அடித்து விடுகிறார். உடனே அன்னை அங்கிருந்து வெளியேறி விடுகிறார். அப்போது அங்கு சியாமா வருகிறார்.
லஷ்மி தேவியிடம் தாங்கள் யார் என பணிவோடு கேட்கிறார் அதற்கு அன்னை உன் தாய்க்கு லட்சுமிதேவிக்கு எவ்வாறு பூஜை செய்ய வேண்டும் என கூற வந்தேன் ஆனால் அவள் என்னை கன்னத்தில் அடித்து அவமதித்து விட்டால் .உடனே ஷியாமா அந்த பூஜையை எனக்கு கற்றுக் கொடுங்கள் எனக் கூறுகிறார் .அன்னையும் பூஜையை கற்றுக் கொடுக்கிறார் .அன்று முதல் ஷியாமா ஆண்டுதோறும் பூஜையை சிறப்பாக செய்து வந்தார் .ஆனால் அரசவையின் செல்வம் குறைந்து கொண்டே வந்தது பூஜை செய்ததன் பலனாக சியாமாவிற்கு நல்ல கணவன் கிடைத்துவிட்டார் .
பத்ரசவா மற்றும் கசந்திரிக்கா நாட்டை விட்டு துரத்தப்பட்டு காட்டுக்குள் வாழ்ந்து வருகின்றனர் .இதனை அறிந்த ஷியாமா ஒரு பானையில் பொன் காசுகளை வழங்கி அதை வைத்து பிழைத்துக் கொள்ளுமாறு கூறுகிறார். அதனைத் கசந்திரிக்கா தொட்டதும் கரியாக மாறிவிடுகிறது. இதனை கண்ட ஷியாமாவிற்கு அப்போதுதான் புரிகிறது அன்றைய தினம் வந்த சுமங்கலி பெண் மகாலட்சுமி தாய் தான் என தன் தாயிடம் கூறுகிறார். தவறை உணர்ந்த கசந்திரிக்கா பூஜையின் விவரத்தை அறிந்து அவரும் முறைப்படி செய்ய தொடங்குகிறார். அதன் பின் கணவன் மீண்டும் முடி சூடி கொள்கிறார். இதுவே வரலட்சுமி விரதம் உருவான கதையாகும்.
விரதம் கடைபிடிக்கும் முறை;
வரலட்சுமி நோன்பு கடைப்பிடிப்பதற்கு முன் உபவாசம் இருப்பது அவசியமாகும். முடியாதவர்கள் பால், பழம் எடுத்துக் கொள்ளலாம். இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. முடிந்தவர்கள் கலசம் வைத்து பூஜை செய்யலாம்.
கலசத்தில் கிராம்பு ,வெட்டிவேர், ஏலக்காய், கற்பூரம், துளசி, எலுமிச்சை, ஒரு ரூபாய் நாணயம், ஐந்து ரூபாய் நாணயம் ,கிழங்கு மஞ்சள் ஆகியவற்றை வைத்து பிறகு அதன் மேல் மாவிலைகள் வைத்து மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து தேங்காய்க்கு சந்தனம் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். நெய்வேத்தியமாக பால் ,பாயாசம் ,பொங்கல் போன்ற இனிப்பு வகைகளை வைத்து மகாலட்சுமிக்கு உரிய மந்திரங்களை கூறி பூஜை செய்ய வேண்டும். பிறகு மங்களப் பொருட்களை தாம்பூலத்தில் வைத்து சுமங்கலி பெண்களுக்கு வழங்க வேண்டும்.
பலன்கள்;
வரலட்சுமி விரதம் மேற்கொண்டால் 16 வகை செல்வங்களையும் பெற்று மகாலட்சுமியின் அருள் எப்போதுமே வீட்டில் இருக்கும் . பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். குறிப்பாக வரலட்சுமி பூஜை செய்யும் வீடுகள் எப்போதும் செல்வ செழிப்பு நிறைந்து திருமகளின் ஆசி பரிபூரணமாக இருக்கும் என்பது நம்பிக்கையாகும்.