செந்தில் பாலாஜி வழக்கில் ‘திடீர்’ டிவிஸ்ட்.! இடையீட்டு மனுவால் தள்ளிப்போன தீர்ப்பு.! 

Supreme court of India - Senthil Balaji

டெல்லி : உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக அவர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை கடந்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தது.

அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து ஜாமீன் கோரி ,  செந்தில் பாலாஜி தரப்பு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ,  உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு முறையிட்டது. செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வின் முன் விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்று இறுதி விசாரணை நடைபெற்ற வேளையில், அமலாக்கத்துறை சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு , செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளிக்க கூடாது என்றும், அதனால் சாட்சியங்கள் கலையக்கூடும் என்றும் கடுமையாக வாதிடப்பட்டது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து வாதிடுகையில், இது ஜாமீன் வழக்கு மட்டுமே. இந்த வழக்கிற்கு சம்பந்தமில்லாத வாதங்களை அமலாக்கத்துறை முன்வைத்து வருகிறது என்று வாதிட்டனர். இதனை குறிப்பிட்டு நீதிபதிகள், செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கட்டும். நாங்கள் (உச்சநீதிமன்றம்) இந்த ஜாமீன் வழக்கின் தீர்பபை மட்டும் வழங்குகிறோம் என்று கூறினர்.

மேலும் நீதிபதிகள் மேலும் கூறுகையில், ‘ ஒவ்வொரு முறை இந்த ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வரும்போதும் அமலாக்கத் துறை வெவ்வேறு வாதங்களை சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை விவகாரத்தின் விசாரணை எப்போது நிறைவடையும்?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அமலாக்கத் துறை தரப்பில் வாதிடுகையில், ‘ செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணையை தமிழக அரசு தாமதப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினர்.

இதனை அடுத்து நீதிபதி அமர்வு கூறுகையில், மணிஷ் சிசோடியா வழக்கில் முன்னதாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள்காட்டி, செந்தில் பாலாஜிக்கும் அதே வகையில் ஜாமீன் வழங்க முடியும் என கூறினர். அதற்கு இடையீட்டு மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், செந்தில் பாலாஜி தமிழக அரசியலில் அதிகாரமிக்கவர். அவரால் சாட்சிகளை கலைக்க முடியும். அதேபோல, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவு செய்துள்ள ஊழல் வழக்கு தாமதமாகி வருவதற்கு தமிழக அரசே காரணம் என்றும் குற்றம் சாட்டினர்.

அதற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி தரப்பு, மனுதாரர் (செந்தில் பாலாஜி) தற்போது அமைச்சர் கூட கிடையாது. மனுதாரர் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அப்படி இருக்கையில், அவர் வெளிநாடு தப்பி செல்லப்போவது இல்லை. விசாரணை காலத்திலேயே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை எப்போது முடியும் என்றும் தெரியவில்லை. அதுவரையில் மனுதாரர் சிறையில் இருக்க வேண்டுமா.? இந்த காரணங்களை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.

இரு தரப்பு இறுதி வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்