பெற்றோர்களே.. குழந்தைகள் நடக்க வாக்கர் பயன்படுத்துகிறீர்களா?.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..!
Baby care -குழந்தைகள் நடப்பதற்காக பயன்படுத்தப்படும் வாக்கர்களால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை இங்கே காணலாம்.
குழந்தைகள் விரைவில் நடக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் மார்க்கெட்டில் கிடைக்கும் வட்ட வடிவ வாக்கர்களை வாங்கி கொடுத்துவிடுகிறீர்கள். இது நடப்பதற்கு மட்டுமல்லாமல் சில தாய்மார்கள் வேலை செய்யும்போது இதில் அமர்த்தி விடுகிறார்கள் இதனால் குழந்தைகள் அழாமல் தானாகவே விளையாடிக் கொண்டிருப்பார்கள். இதனால் சில நேரங்களில் பல ஆபத்துகள் குழந்தைகளுக்கு ஏற்படும் என குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
குழந்தைகளின் வளர்ச்சி நிலை;
ஒரு குழந்தை பிறந்த முதல் மாதத்தில் தாயின் முகத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள். இரண்டாவது மாதத்தில் சிரிப்பார்கள், மூன்றாவது மாதத்தில் குப்புறத் திரும்பி படுப்பார்கள், ஐந்தாவது மாதத்தில் தலை நிற்க துவங்கிவிடும். ஆறாவது மாதம் யாராவது உதவியுடன் உட்கார துவங்கி விடுவார்கள் ,ஒன்பதாவது மாதத்தில் தானாகவே அமர்ந்து கொள்வார்கள்.
இப்படி யாரும் சொல்லிக் கொடுத்து வராமல் அவர்களின் வளர்ச்சி நிலை இயற்கையாகவே இருக்கும். அதேபோல் தான் நிற்பதும் நடப்பதும் அந்தந்த மாதங்களில் இயற்கையாகவே நடக்கும். குழந்தையின் உடற்பாகங்கள் வலுவடையும்போது அந்த அந்த மாதங்களில் வளர்ச்சி நிலை இருக்கும். தொடை பகுதி மற்றும் உடலில் முதுகுத்தண்டு பகுதிகள் வலிமையான பிறகு நடக்க ஆரம்பித்து விடுவார்கள்.
உதாரணமாக கழுத்து தசை வலுவான பிறகுதான் கழுத்து நிற்கும் அதுபோல் ஒவ்வொரு உறுப்புக்களின் வலிமைக்குப் பிறகுதான் அந்த உறுப்பு அடுத்த நிலைக்குச் செல்லும். ஆனால் நாம் தான் 8 மாதத்தில் 8 அடி வைக்க வேண்டும் என்ற சொல்லைப் பிடித்துக் கொண்டு அவர்களை அவசரப்படுத்துகிறோம். இதனால் வாக்கர்களை வாங்கி அதில் நடைபழகச் வைக்கிறோம் .
வாக்கரால் குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனைகள்;
குழந்தைகளை வாக்கரில் உட்கார வைத்தால் கால் பகுதியை வைத்து உந்தும் போது அது வேகமாக செல்லும் அந்த வேகத்தை அவர்கள் பேலன்ஸ் பண்ண தெரியாததால் அவர்கள் கீழே விழ வாய்ப்பு உள்ளது என குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் இவ்வாறு வாக்கரில் அமரும் குழந்தைகளுக்கு குதிக்கால் பகுதி மட்டும் வலுவாகி காலின் விரல் பகுதிகள் வலு குறைவாக இருக்கும், இதனால் நடக்க ஆரம்பித்த பிறகு நுனி காலால் நடக்கும் நிலை ஏற்படும். அது மட்டுமல்லாமல் குழந்தைகளின் நடக்கும் ஸ்டெயிலிலும் மாறுபாடு காணப்படும் .கால்கள் வளைந்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
வாக்கர் இல்லாமல் நடை பழகும் முறை;
பெற்றோர்களே.. 9 மாதம் வரை காத்திருங்கள் பிறகு ஏதேனும் சேர்களை பிடித்து நிற்க வையுங்கள் அதன் பிறகு அவர்களின் கைகளைப் பிடித்து நடக்கச் செய்யலாம். வேண்டுமென்றால் புஷ் பண்ணுமாறு இருக்கக்கூடிய தள்ளு வண்டியை[ நடைவண்டி] பயன்படுத்திக் கொள்வது சிறந்ததாகும்.
மேலும் குழந்தை நிற்பதற்கு ஒரு வயது வரை எடுத்துக் கொள்வதில் தவறில்லை அதன் பிறகு அவர்கள் நடை பழகினாலே போதும் என குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உணவு முறை;
குழந்தைகளுக்கு ஒரு வயது வரை விட்டமின் டி3 மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் சூரிய ஒளி அவர்கள் மீது படும் படி வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். மேலும் சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும் .குறிப்பாக புரதம் மற்றும் கால்சியம், விட்டமின் டி நிறைந்த உணவுகளை[ பால் ,பன்னீர்,முட்டை,] தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
இவ்வாறு பணம் செலவு செய்து வாக்கர்களை வாங்கி கொடுப்பதால் குழந்தைகளுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தி அவர்களின் நடக்கும் விதத்திலும் மாற்றங்களை ஏற்படுகிறது. அதனால் வாக்கர்களை தவிர்த்து நடை வண்டிகளை பயன்படுத்துவது சிறந்ததாகும் .