ஒரு வாரம் கெடு., பெண் மருத்துவர் கொலையை சிபிஐ விசாரிக்கும்.! மம்தா பானர்ஜி உறுதி.!
கொல்கத்தா : ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் ஞாயிற்று கிழமைக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் ஒரு அரங்கில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அரசு மருத்துவமனை வளாகத்தில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த படுகொலை சம்பந்தமாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், குற்றவாளிகளை காவல்துறையினர் விரைந்து கைது செய்வார்கள். வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் காவல்துறையால் இந்த வழக்கு தீர்க்கப்படும். அப்படி முடிக்கப்படாவிட்டால் மேற்குவங்க காவல்துறை இந்த வழக்கை விசாரிக்காது. சிபிஐ வசம் இந்த வழக்கை நாங்கள் ஒப்படைப்போம்.
கொல்கத்தா காவல்துறை கமிஷனரிடம் இந்த சம்பவம் குறித்து அன்றே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினேன். இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்று எங்களால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. போலீசார் இன்று மருத்துவமனைக்கு தடவியல் துறையினர் மற்றும் பிறக்குழுக்கள் உடன் ஆய்வு செய்து வருகின்றனர். கல்லூரி முதல்வர் இன்று ராஜினாமா செய்துள்ளார் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.