குஜராத் பூகம்பம்., 2500 உயிரிழப்புகள்.! வயநாட்டில் பிரதமர் மோடி உருக்கம்.!
வயநாடு : கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி அதிகாலையில் கேரளா மாநிலம் வயநாட்டில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவங்கள் நாட்டையே உலுக்கின. இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இன்னும் பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி வருகை :
இன்னும் பல்வேறு பகுதிகளில் மீட்புப்படையினர் , இந்திய ராணுவம் என பலர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்வதற்காக இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் வயநாடு வந்திருந்தார்.
ஹெலிகாப்டரில் ஆய்வு :
வயநாடு வந்த பிரதமர் மோடி , தனி ஹெலிகாப்டரில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பாஜக எம்பி சுரேஷ் கோபி, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோர் உடன் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள வீரர்களிடம் மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஆலோசனை கூட்டம் :
அதற்கு பிறகு கல்பெட்டாவில் உள்ள வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி ஆலோசனை அதிகாரிகள் உடன் நிலச்சரிவு பாதிப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள மாநில தலைமை செயலாளர் வேணு ஆகியோர் உடன் இருந்தனர். இந்த கூட்டத்தில் , வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்ய 2000 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு :
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து, பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ” நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்ததில் இருந்தே அங்குள்ள நடவடிக்கைகள் குறித்து கவனித்து வருகிறேன். பேரிடரில் உதவக்கூடிய மத்திய அரசின் அனைத்து அமைப்புகளும் உடனடியாக கேரளாவுக்கு அனுப்பப்பட்டன. இந்த பேரழிவு சாதாரணமானது அல்ல. ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் சிதைந்துள்ளன. அந்த இடத்திலேயே நிலைமையைப் பார்த்தேன். இந்த பேரிடரை எதிர்கொண்ட நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்டவர்களை நான் சந்தித்தேன். காயமடைந்த நோயாளிகளை மருத்துவமனையில் சந்தித்தேன்.
சம்பவம் நடந்த அன்று காலை முதல்வர் பினராயி விஜயனுடன் நான் தொலைபேசி வாயிலாக பேசினேன். நாங்கள் (மத்திய அரசு) உதவி வழங்குவோம் என்றும், விரைவில் சம்பவ இடத்திற்குச் வருவோம் என்றும் உறுதியளித்தேன்.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர், இந்திய ராணுவம், காவல்துறை , மருத்துவர்கள் குழு ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் உதவ வரச்செய்தோம். அவர்கள் (கேரளா) தனியாக இல்லை. நாங்கள் அனைவரும் அவர்களுடன் துணையாக நிற்கிறோம். என்று உறுதியளிக்கிறேன். நிவாரண பணிகள் பணப்பற்றாக்குறையால் தடைப்படாமல் இருக்குமாறு பணிகளை கவனித்து வருகிறோம்.
ஒரு பேரழிவை நான் மிக நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். அதன் பாதிப்பை உணர்ந்துள்ளேன். சுமார் 45-47 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மோர்பியில் ஒரு அணை இருந்தது. கனமழை பெய்து அணை முற்றிலும் சேதமடைந்து மோர்பி நகருக்குள் தண்ணீர் புகுந்தது. நகர் முழுவதும் 10-12 அடி தண்ணீர் இருந்தது. 2,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நான் அங்கு சுமார் 6 மாதங்கள் தன்னார்வத் தொண்டனாக நான் இருந்தேன். அங்கு இருந்ததால் இந்த சூழ்நிலைகளை என்னால் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்திய அரசு நாட்டில் உள்ள எந்த பகுதியையும் விட்டுவிடாது என்று நான் உறுதியளிக்கிறேன் என வயநாட்டில் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.