சிரித்த முகத்துடன் பிரதமர் மோடி, ராகுல் காந்தி.! தேநீர் விருந்து தகவல்கள்…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22இல் தொடங்கப்பட்டது. ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று நிறைவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் , குறிப்பிட்ட தேதிக்கு முன்னராகவே நேற்று (ஆகஸ்ட் 9) நாடாளுமன்ற கூட்டத்தொடர் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக இரு அவை தலைவர்களும் அறிவித்துவிட்டனர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கடுமையான வாதங்களை முன்வைத்து பேசி வந்தவர்களை ஆசுவாசப்படுத்த கூட்டத்தொடர் முடிந்ததும் தேநீர் விருந்து (டீ பார்ட்டி) ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த தேநீர் விருந்துக்கு அனைத்து கட்சி தலைவர்களையும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்து இருந்தார்.
அந்த அழைப்பின் பெயரில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி , திமுக எம்பி கனிமொழி , மதிமுக எம்பி துரை வைகோ உள்ளிட்ட பலரும், பிரதமர் மோடி , அமைச்சர் கிரண் ரிஜிஜூ , அமித்ஷா , ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த தேநீர் விருந்தில் அரசியல் வேறுபாடின்றி அனைவரும் மற்ற உறுப்பினர்களுடன் சிரித்து பேசி மகிழ்ந்தனர்.
பிரதமர் மோடி, ராகுல் காந்தி , சபாநாயகர் ஓம் பிர்லா, அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் அடுத்தடுத்து எதிரெதிரே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.