போர் பதற்றம்.? இஸ்ரேல் விமான சேவையை நிறுத்திய ஏர் இந்தியா.!
டெல்லி : இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து பாலஸ்தீன நாட்டின் காசா நகரில் தொடர் தாக்குதல் நடத்தி வரும் செய்தி அனைவரும் அறிந்ததே. ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும் வரையில் போர் நிறுத்தம் இல்லை என்று கூறி இருந்தது இஸ்ரேல்.
இப்படியான சூழலில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் அண்மையில் ஈரானில் வைத்து ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். ஈரானில் வைத்து அவர் கொல்லப்பட்டதால், இஸ்ரேல் மீது ஈரான் போர் தொடுக்கும் சூழல் உருவாகிவிட்டது.
இப்படியான போர் பதற்ற சூழலில், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டின் உதவிகளை நாடியுள்ளது. அமெரிக்க அமைச்சர் ஆஸ்ட்டின் அண்மையில் கூறுகையில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் நாங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக துணை நிற்போம் என்றும் இது தொடர்பாக பிரிட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம் என்றும் கூறினார்.
இஸ்ரேலில் நிலவும் இந்த அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா, இஸ்ரேலுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், மத்திய கிழக்கின் சில பகுதிகளில் (இஸ்ரேல், ஈரான் பகுதிகளில்) உள்ள தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, டெல் அவிவ் (இஸ்ரேல் தலைநகர்) மற்றும் அங்கிருந்து புறப்படும் எங்கள் விமானங்களின் செயல்பாடுகள் மறு அறிவிப்பு வரும் வரை தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
நாங்கள் தொடர்ந்து அங்கு நிலவும் நிலைமையை கண்காணித்து வருகிறோம். டெல் அவிவ் நகருக்குச் செல்வதற்கான ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையானது. நாங்கள் தற்போது டிக்கெட் முன்பதிவு செய்த பணத்தை திருப்பி தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மேலும், தகவலுக்கு, எங்கள் உதவி மையத்தை தொடர்பு கொள்ளுங்கள். 011-69329333 / 011-69329999 என்ற எங்களுக்கு அழைக்கவும் என அந்த பதிவில் ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.