பூமிக்கு திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? வெளியாகும் பரபரப்பு தகவல்கள்….
நாசா : அமெரிக்க விண்வெளி தளமான நாசாவில் இருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நகரத்திற்கு ( International Space Station) சென்றனர். 8 நாள் பயணமாக சென்ற இவர்கள் இன்னும் பூமிக்கு திரும்பாமல் உள்ளனர் என்பது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
பூமிக்கு திரும்ப திட்டம் :
போயிங் நிறுவனத்தின் ஸ்டர்லைனர் எனும் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகிய இருவரும் ஜூன் 5ஆம் தேதி விண்ணில் பறந்தனர். சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற அவர்கள் ஜூன் மாதம் 26ஆம் தேதி பூமிக்கு திரும்ப திட்டமிட்டு இருந்தனர்.
திட்டம் தோல்வி :
ஆனால், துரதஷ்டவசமாக போயிங் ஸ்டர்லைனர் விண்கலத்தில் உந்துவிசை அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் ஆகியோரை பூமிக்கு திரும்ப அழைத்து வர நாசா பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நாசா புதிய யோசனை :
தற்போது வெளியான தகவலின்படி, தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்த மாதம் 18ஆம் தேதி விண்வெளிக்கு 4 பேர் கொண்ட குழுவை அனுப்ப இருந்தது. இதனை குறிப்பிட்டு நாசா அண்மையில் விளக்கம் அளித்தது.
அதாவது, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 4 பேர் கொண்ட குழுவை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டு இருந்தது. தற்போது நாசா நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து 2 பேர் மட்டும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பயணிப்பதாக முடிவு செய்யபட்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் :
ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி வீரர்கள் தங்கள் ஆய்வுகளை விண்வெளியில் மேற்கொண்டு பின்னர் பூமிக்கு திரும்புகையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோரை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.
சோதனையிடும் நாசா :
ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் நாசாவின்விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளதால், தற்போது நாசா ஆராய்ச்சியாளர்கள் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தை ஆய்வுக்கு உட்படுத்த உள்ளனர். இந்த ஆய்வு முடிய 1 மாத காலம் ஆகும் என்பதால் செப்டம்பர் மாதம் தான் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.
அதன் பிறகு ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளியில் ஆய்வுகளை முடித்துக்கொண்டு அடுத்த வருடம் பிப்ரவரியில் தான் பூமிக்கு திரும்பும். அதில் தான் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் பூமிக்கு திரும்ப உள்ளனர் என நாசா விளக்கம் அளித்துள்ளது. இதற்கு முதலில் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சோதனையில் வெற்றி பெற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
125 மில்லியன் இழப்பு :
சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் ஆகியோர் விண்வெளியில் இருந்து திரும்ப வரமுடியாத நிலையானது, போயிங் நிறுவனத்திற்கு பலத்த சரிவை கொடுத்துள்ளது. நடப்பாண்டு 2ஆம் காலாண்டில் இந்த நிறுவனம் சுமார் 125 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.