வயநாடு நிலச்சரிவு., முதன் முதலாக தகவல் கொடுத்த பெண் சடலமாக மீட்பு.! 

Wayanad Landslide

வயநாடு நிலச்சரிவு : கடந்த ஜூலை 30ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக, கேரளா மாநிலம் வயநாட்டில் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் 350க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்துள்ளது. 6 நாட்கள் கடந்தும் இன்னும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்புப்பணிகளில் காணாமல் போனவர்களின் உடல்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தான் சூரல்மலையை சேர்ந்த நீது ஜோஜோ எனும் பெண்ணின் உடலை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். உயிரிழந்த நீது ஜோஜோ கொடுத்த முதல் தகவலின் பெயரில் தான் மீட்புப்படையினருக்கு நிலச்சரிவு நடந்தது பற்றி முதல் தகவல் தெரிய வந்துள்ளது என கூறப்படுகிறது.

வயநாடு மருத்துவ அறிவியல் நிறுவனமான விம்ஸ் (WIMS) நிறுவனத்தில் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் நீது ஜோஜோ. இவர் தனது 5 வயது மகன் மற்றும் கணவருடன் சூரல்மலை பகுதியில் வசித்து வந்துள்ளார்.

நிலச்சரிவு ஏற்பட்ட நாளில், நள்ளிரவு தனது வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததாகவும், தங்களை காப்பாற்ற கோரியும், தான் பணிபுரிந்த விம்ஸ் நிறுவனத்திற்கு தொலைபேசி வாயிலாக நீது கூறியுள்ளார். அதன் பெயரில் தான் விம்ஸ் நிறுவனம் மீட்புப்படையினருக்கு நிலச்சரிவு பற்றிய தகவலை அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் துரதஷ்டவசமாக நீது ஜோஜோ, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல் 5 நாட்களுக்கு பிறகு நேற்று தான் சாலியாறு பகுதியில் மீட்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அவரது உடலில் அணிந்து இருந்த ஆபரணங்களை கொண்டு நீதுவின் உறவினர்கள் அவரை அடையாளம் கண்டுள்ளனர்.

நீதுவின் கணவரும், 5 வயது மகனும் நிலச்சரிவில் இருந்து உயிர்பிழைத்து உள்ளனர். மீட்கப்பட்ட நீதுவின் உடல் அவரது கணவரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர், சூரல்மலை புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் நீது ஜோஜோவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வயநாடு பற்றி முதன் முதலாக தகவல் கூறிய நீது ஜோஜோ உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்