திருச்சியில் ‘திடீர்’ வெள்ளப்பெருக்கு… தமிழக அரசு கொடுத்த விளக்கம்.!

Trichy Kollidam River

திருச்சி : காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்ததன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. அதே போல திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆறும் நிரம்பி வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக திருச்சி – கொள்ளிடம் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானத்தில் சேதம் குறித்து விளக்கம். கொள்ளிடம் ஆற்றின் நேப்பியர் பாலம் அருகே மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க சிறிய அளவில் தடுப்பணை கட்டப்பட்டது. அதுவும் குறிப்பிட்ட பகுதி சேதமடைந்தது. மேலும் கொள்ளிடம் ஆற்றருகே இருந்த உயர்மின் கோபுரமும் மண் அரிப்பு காரணமாக கிழே சரிந்தது குறிப்பிடதக்கது.

காவிரி ஆற்றில் வெள்ளம் குறித்து தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதில், திருச்சி நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை-திருச்சி-திண்டுக்கல் சாலையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 2014-15இல் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மூலம் உயர்மட்ட பாலம் கட்டும் பணி 24 கண்களுடன் 792 மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2018இல் காவேரியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டதால் பாலத்திற்கு இணையாக இருந்த பழைய இரும்பு பாலத்தில் கண் 18 19 சேதமடைந்து அடித்துச்செல்லப்பட்டது. புதிய பாலத்தின் பாலத் தூண் 17,18,19,20,21 கீழ் ஆகியவற்றில் உள்ள நிலத் தூண்கள் வரையில் மணல் அரிப்பு ஏற்பட்டு இரண்டிலிருந்து நான்கு மீட்டர் ஆழம் வரை மண்ணரிப்பு ஏற்பட்டது.

இதனை தடுக்கும் விதமாகவும், பாலத்தின் உறுதித் தன்மையை மேம்படுத்தும் வகையிலும் மேற்குறிப்பிட்ட சாலை பகுதியில் பாலத்தின் அடிமானத்தின் அருகில் மணல் சேர்வதற்காகவும் ரூபாய் 6.55 கோடி மதிப்பீட்டில் 800 மீட்டர் நீளத்திற்கு மண் தாங்கு சுவர் (Bed Protection wall) அமைப்பதற்காக, 19.5.2020 அன்று புதிய சேவை திட்ட மூலம் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 300 மீட்டர் ஆர்சிசி தடுப்புச் சுவரும். 492 மீட்டர் பிசிசி தடுப்புச்சுவரும் அமைக்கப்பட்டன.

தற்போது பருவ மழை காரணமாக கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழையினால் காவேரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிக நீர்வரத்து அதிகமானதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கனஅடி நீர் 31.07.2024 அன்று இரவு திறந்து விடப்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்ட அதிக அளவு நீர்வரத்து கொள்ளிடம் ஆற்றில் திருப்பிவிடப்பட்டதால் பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மண் தாங்கு சுவரில் ஏறத்தாழ 30 மீட்டர் அளவு பாலம் கண் 22, 23 க்கு இடைப்பட்ட பகுதியில் சற்று மேல் நோக்கி தடுப்புசுவரானது நகர்த்தப்பட்டுள்ளது என தெரியவருகிறது.

நீர்வரத்து தொடர்ந்த வண்ணம் அதிகரித்து வருவதால் பாதிப்படைந்துள்ள மண்தாங்கு சுவரின் தற்போதைய நிலை குறித்து முழுமையாக அறிய இயலவில்லை. மேலும் நீர்வரத்து குறைந்த பிறகே பாதிப்படைந்துள்ள தாங்கு சுவரின் விவரங்கள் அறிய இயலும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்