அதிகரிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு.., ஏழ்மையில் இருந்து மீண்டு வரும் 80 கோடி இந்தியர்கள்.!
ஐ.நா கூட்டத்தொடர் : கடந்த 10 ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது இந்தியர்கள் மத்தியில் அதிகளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. அதிலும் கடந்த 5 ஆண்டுகளில் டிஜிட்டல் வாயிலாக பரிவர்த்தனை என்பது அசுரவளர்ச்சி அடைந்துள்ளது என்பதை சிறு சிறு கடைகளில் இருக்கும் QR ஸ்கேனர் கூட எடுத்துரைத்து வருகிறது.
இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் கொண்டு ஏழைகள், ஏழ்மையில் இருந்து முன்னேறி வருவதாக ஐ.நா மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 78வது கூட்டத் தொடர் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் இதுபற்றி விரிவாக ஐநா சபையில் கூறுகையில், கடந்த 5-6 ஆண்டுகளில் 800 மில்லியன் (80 கோடி) மக்கள் வறுமையில் இருந்து வெளியேற இந்தியாயாவில் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல்மயமாக்கல் பெரிதும் உதவியது என பாராட்டு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மத்தியில் ஸ்மார்ட்போனின் பயன்பாடு என்பது அதிகரித்துள்ளது.அவர்கள் தற்போது அதிகளவில் டிஜிட்டல் வாயிலாக பணம் செலுத்துவதை அதிகளவில் காண முடிகிறது.
டிஜிட்டல் மயமாக்கல் என்பது நாட்டின் விரைவான வளர்ச்சிக்கான அடிப்படையாகும். உதாரணமாக, இந்தியாவில் கடந்த 5,6 ஆண்டுகளில் 800 மில்லியன் மக்கள் ஸ்மார்ட் போன் பயன்பாட்டினால் மட்டும் அவர்களின் வறுமையிலிருந்து மீண்டு வருகின்றனர். விவசாயத்துறையில் டிஜிட்டல்மயம் என்பது எதிர்கால சந்ததியின் பசியில்லா உலகத்தின் முன்னேற்றமாகும்.
வங்கி அமைப்புடன் முன்னர் அதிக அளவில் தொடர்பு கொள்ளாத இந்தியாவின் கிராமப்புற விவசாயிகள், இப்போது தங்கள் அனைத்து வணிகங்களையும் தங்கள் ஸ்மார்ட்போன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செய்து வருவதை காண முடிகிறது. அவர்கள் கட்டணங்களை ஆன்லைன் வாயிலாக செலுத்துகிறார்கள்.
தங்கள் விவசாய ஆர்டர்களுக்கான தொகையை அதே ஆன்லைன் வாயிலாக பெறுகிறார்கள். இதன் மூலம் 800 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவில் அதிக அளவிலான இணையபயன்பாடு, கிட்டத்தட்ட அனைவரிடமும் செல்போன் உள்ளது என்று இந்தியர்கள் மத்தியில் ஸ்மார்ட் போன் மற்றும் டிஜிட்டல் பரிவார்த்தனை வளர்ச்சி பற்றி ஐ.நா பொதுச்சபையின் 78வது கூட்டத் தொடர் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்தார்.