25 லட்சம் சன்மானம்… தமிழகத்தில் தேடப்படும் குற்றவாளிகள்.! என்ஐஏ தீவிர சோதனை.!
என்ஐஏ சோதனை : கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் தஞ்சையில் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். தஞ்சை திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் மதமாற்றத்தை எதிர்த்து செயல்பட்டதாகவும், அதன் பெயரில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை விசாரணையில் கூறப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அதில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேர் தற்போது வரையில் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர். இந்த கொலை சம்பவத்திற்கு பின்னால், தடை செய்யப்பட்ட அமைப்பு இருப்பதாக கூறி இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) கையில் எடுத்தது.
என்ஐஏ விசாரணையில், இதுவரை தஞ்சை, திருச்சி, கும்பகோணம் என பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே தலைமறைவாக உள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா, கும்பகோணத்தை சேர்ந்த அப்துல் மஜித், வடக்குமாங்குடியை சேர்ந்த புர்கானுதீன், திருவிடைமருதூரை சேர்ந்த ஷாஹுல் ஹமீத் மற்றும் திருமங்கலக்குடியை சேர்ந்த நஃபீல் ஹசன் ஆகியோர் பற்றிய தகவல் கூறினால் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அவர்கள் புகைப்படம் முகவரி அடங்கிய போஸ்டர்கள் திருச்சி, தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் ஒட்டப்பட்டு , இவர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் 5 பேருக்கும் தலா 5 லட்சம் என மொத்தம் 25 லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 5 குற்றவாளிகளும் இன்னும் கிடைக்காத நிலையில், இன்று மீண்டும் தஞ்சை, திருச்சி,கும்பகோணம் ஆகிய பகுதிகளில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை செய்து வருகிறது.