தோண்ட தோண்ட உடல்கள்.. கொட்டும் மழையிலும் மீட்புப் பணி.. பலி எண்ணிக்கை 200-ஐ தாண்டியது!
கேரளா : வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்தது. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்று கொட்டும் மழையும் பொறுப்படத்தாமல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், 225 பேருக்கும் மேல் காணவில்லை என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் நிலச்சரிவால் கடுமையாக பாதித்த முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இருவழிஞ்சி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால், அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் வெளியேறினர். ஆற்றின் இடையே தற்காலிக இரும்பு பாலம் அமைக்கும் பணியும் தடைபட்டுள்ளது.
சூரல்மலை – முண்டக்கை இடையே இரும்பு பாலம் அமைக்கும் பணியிலும் தொய்வு ஏற்பட்டது. அனாலும், கொட்டும் மழையிலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நாடடைபெற்று வருகிறது.
கனமழை எச்சரிக்கை :
கேரளாவில் இன்னும் அடுத்து 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது. வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும், மேலும் 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.
உடல்கள் ஒப்படைப்பு :
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களில் 58 ஆண்கள், 55 பெண்கள் என மொத்தம் 113 பேரின் உடல்கள் மேப்பாடி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், 113 பேரில் 79 பேரின் உடல் அடையாளம் காணப்பட்ட நிலையில், 5 பேரின் உடல் பாகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. உடல்கள் உடனுக்குடன் அடையாளம் காணப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. மேலும், அடையாளம் தெரியாத உடல்கள் பாதுகாக்கப்படுகிறது.