கேரள நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதி உதவி!
வயநாடு நிலச்சரிவு : கடந்த ஜூலை 30-ஆம் தேதி கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 170-க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 1,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இன்னும், மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
இந்த சம்பவம் இந்தியாவையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு கேரள முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பலர் உயிரிழந்த தகவல் மற்றும் பலர் காணவில்லை என்ற சோகமான செய்தியால் வேதனையடைந்த நடிகர் விக்ரம் இன்று கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
மேலும், வயநாட்டின் துயர் துடைக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.donation.cmdrf.kerala.gov.in/ இணையதளத்திற்கு சென்று கூட உங்களிடம் இருக்கும் வங்கிகணக்குகளை தேர்வு செய்தும் உங்களால் முடிந்த தொகையை அனுப்பி உதவி செய்யலாம்.