உலகின் முதல் சிஎன்ஜி பைக்.! 77வது சுதந்திர தினம்., 77 நகரங்களில் விற்பனை தொடக்கம்..
பஜாஜ் ஃப்ரீடம் 125 : பெட்ரோல் , டீசல் உள்ளிட்ட எரிசக்திகளுக்கு மாற்று சக்தி மூலம் இயங்கும் வாகனங்களின் உற்பத்தியில் , வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. அதற்கேற்றாற் போல அரசும் மாற்று சக்தி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட அளவில் வரிசலுகையையும் அறிவித்து வருகிறது.
இதனை புரிந்து கொண்டு மற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார வாகனங்களில் தங்கள் கவனத்தை திருப்ப, பஜாஜ் நிறுவனம் உலகிலேயே முதன் முறையாக சிஎன்ஜி கியாஸ் மூலம் இயங்கும் இருசக்கர வாகனத்தை தயாரித்து அதனை சந்தைப்படுத்தும் முயற்சியில் வெகு தீவிரமாக களமிறங்கியுள்ளது.
பஜாஜ் ஃப்ரீடம் 125 எனும் பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனமானது 1 கிலோ கியாஸ் அளவுக்கு சுமார் 102 கி.மீ வரையில் மைலேஜ் தரும் என கூறப்பட்டுள்ளது. இதற்கான சோதனை முயற்சியிலும் பஜாஜ் ஃப்ரீடம் 125 வெற்றி அடைந்ததாக கூறப்பட்டது. இதன் விலை ரூ.95,000 முதல் 1.10 லட்ச ரூபாய் வரையில் வெவ்வேறு வேரியன்ட்களில் எக்ஸ் ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் முக்கிய 77 நகரங்களில் உள்ள பஜாஜ் ஷோரூம்களில் கிடைக்கப்பெறும் வகையில் முழுவீச்சில் விற்பனைக்கு தயாராகியுள்ளது. இந்த வாகனத்திற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன.