எதற்கும் தயாராக இருக்கிறோம்.. மீட்புப்படை அதிகாரி முக்கிய தகவல்.!
வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக நேற்று அதிகாலை சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலச்சரிவு , கனமழை பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய மீட்புப்படையினர், இந்திய ராணுவத்தினர், தமிழக மீட்புப்படையினர் என பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றும் நாளையும் வயநாடு பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் மீட்புப்பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருந்தும், பல்வேறு பகுதிகளில் அடித்து செல்லப்பட்ட பாலத்திற்கு பதிலாக தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டு மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வயநாடு மீட்புப்பணியில் ஈடுபாட்டுள்ள ராணுவ அதிகாரி அர்ஜுன் சேகன் ANI செய்தி நிறுவனத்திடம் மீட்புபணிகள் குறித்து கூறுகையில், ”நேற்று முன்தினம் நள்ளிரவு 2 – 2.30 மணியளவில் நிலச்சரிவு சம்பவம் நடந்தது. நேற்று காலை முதல் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்று வானிலை சீராக உள்ளது. பல்வேறு இடங்களில் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
தற்போது, எங்கள் பொறியாளர்கள் மேற்பார்வையில் மண் அள்ளும் கருவிகளை கொண்டு தற்காலிக பாலங்கள் அமைத்து எங்களின் மீட்புப் பணியை இடிபாடுகளுக்கு இடையே மேற்கொண்டு வருகிறோம். இன்று காலை நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150ஐத் தாண்டியுள்ளது. ஏராளமானோர் உயிருடன் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்னும் பலர் உள்ளே இருக்கின்றனர். மோப்ப நாய்கள், தற்காலிக பாலங்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் கொண்டு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றும் நாளையும் வானிலை எப்படி இருக்கும் என எங்களுக்கு தெரியாது. எப்படி இருந்தாலும் மீட்புப்பணிகளை தொடர நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்று ராணுவ அதிகாரி அர்ஜுன் சேகன் தெரிவித்துள்ளார்.