வயநாட்டை தொடர்ந்து மூணாறில் நிலச்சரிவு.! போக்குவரத்து கடும் பாதிப்பு.!
கேரளா : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 80-ஐ கடந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வயநாடு பகுதியில் மீட்புப்பணியில் மாநில மீட்புப்படையினர், தேசிய மீட்புப்படையினர், இந்திய ராணுவத்தினர், விமானப்படையினர் என பலர் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் மண்ணிற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வயநாடு நிலச்சரிவு போல, இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டு அங்கு போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. உடுமலை பகுதியில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு செல்லும் பாதை முழுதாக மூடப்பட்டுள்ளது.
மூணாறில் இருந்து திருப்பூர், உடுமலை , தேனி மற்றும் கொச்சி செல்லும் அனைத்து சாலைகளும் மண் சரிவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் தமிழகத்தில் இருந்து உடுமலை, போடி, குமுளி வழியாக மூணாறு செல்லும் சாலைகளும் மண்சரிவால் பெருமளவு பாதிக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.