கேரளாவுக்கு உதவி செய்ய தமிழக அரசு தயார்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி.!
வயநாடு நிலச்சரிவு : கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, வயநாடு பகுதியில் 3 இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 1000க்கும் மேற்பட்டர் நிலச்சரிவு பகுதியில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மாநில, தேசிய மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை, சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஐ கடந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாலும், இன்னும் மழை தொடர்வதாலும், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
வயநாடு நிலச்சரிவு குறித்து பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் நிலச்சரிவு குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் விளைவாக நேர்ந்த உயிரிழப்பு சம்பவங்கள் பற்றி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அப்பகுதியில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாக நான் அறிந்து கொண்டேன். மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் நிலச்சரிவில் சிக்கியுள்ள அனைவரும் காப்பாற்றப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
இந்த நெருக்கடியான நேரத்தில், நமது சகோதர மாநிலமான கேரளாவுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.