கேரளாவில் நேரத்திற்கு ஏற்ப மின்சார கட்டணத்தை மாற்ற அரசு திட்டம்.!
பாலக்காடு : மின் நெருக்கடிக்கு தீர்வு காண, பகலில் பயன்படுத்துவதற்கு மட்டும் கட்டணத்தை குறைத்து, இரவில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, கேரள அரசு யோசித்து வருவதாக, கேரள மின்துறை அமைச்சர் கே.கிருஷ்ணன்குட்டி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மின் கணக்கீட்டுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ள நிலையில், பகல் நேர உபயோகத்திற்கு கட்டணத்தை குறைக்கவும், இரவு நேர உபயோகத்திற்கு கட்டணத்தை உயர்த்தவும் திட்டம். இதனால், பீக் ஹவர்களில் தேவையற்ற உபயோகம் தடுக்கப்படும் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
கேரள மாநில மின்சார வாரியம், உள்நாட்டு மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு ‘நாளின் நேரம்’ (ToD) கட்டணத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது பகல் நேரத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான கட்டணங்களைக் குறைக்கும் மற்றும் இரவு நேர நுகர்வு விகிதத்தை அதிகரிக்க வழிவகுக்கும்.
இது குறித்து பேசிய அமைச்சர், “பெரும்பாலான வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளதால், ஒவ்வொரு நேரத்திலும் ஸ்மார்ட் மீட்டர் மூலம் நேரத்திற்கேற்ற மின் பயன்பாட்டை எளிதில் கணக்கிட முடியும். மாநிலத்தில் முதற்கட்டமாக 3 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. வீடுகளுக்கு இரண்டாம் கட்டமாக இந்த மீட்டர்கள் அமலுக்கு வரும்” என்று கூறியுள்ளார்.
சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பகல் நேர கட்டணத்தை குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான மின் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நெரிசல் இல்லாத நேரங்களில் நுகர்வுக்கான கட்டணம் அதிகரிக்கப்படும்.