முடிந்த வரை விளையாடுங்க…அது ரொம்ப முக்கியம்! பாண்டியாவுக்கு அட்வைஸ் கொடுத்த ரவி சாஸ்திரி!!
ஹர்திக் பாண்டியா : இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தற்போது இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடரில் கேப்டனாக செயல்படாதது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை தேர்வாளரான அஜித் அகர்கர் ஹர்திக் பாண்டியாவுக்கு உடல் தகுதி சவாலாக இருப்பதால் அவர் இப்போது கேப்டனாக இருக்கவில்லை என்று காரணத்தை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியா உடல் தகுதிப்பற்றி பல கிரிக்கெட் வீரர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக வரும் எல்லா போட்டிகளில் விளையாடவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஏனென்றால், அவர் தொடர்ச்சியாக விளையாடினாள் மட்டும் தான் அவருடைய உடற்தகுதி நன்றாக மேம்படும். எனவே டி20 ஐ கிரிக்கெட், 50 ஓவர் என எதுவாக இருந்தாலும் அவரால் முடிந்தவரை விளையாட வேண்டும். மேலும் அவர் வலுவாகவும் உடற்தகுதியாகவும் இருப்பதால் தான் தொடர்ச்சியாக விளையாடி கொண்டும் இருக்கிறார். பேட்டிங் செய்வது போல, அவருடைய பந்துவீச்சும் முக்கியமானது. ஒரு நாள் போட்டியில் நீங்கள் 10 ஓவர் வீச வேண்டிய இடத்தில் யாரேனும் வந்து மூன்று ஓவர்கள் வீசினால், ஒரு வீரரின் சமநிலை பாதிக்கப்படும்.
எனவே, என்னை பொறுத்தவரை உங்களால் ஒவ்வொரு போட்டியிலும் 8 முதல் 10 ஓவர்கள் வரை தொடர்ந்து பந்துவீச முடிந்தாலோ, அவர் செய்யும் விதத்தில் பேட்டிங் செய்தாலோ தான் சரியான உடற்தகுதியுடன் இருக்கிறார் என்று நான் நினைத்து கொள்வேன். இப்போது அவர் சரியாக தான் இருக்கிறார். ஆனால், இன்னும் அவர் உடற்தகுதியை மேம்படுத்த வேண்டும்”, என ஹர்திக் பாண்டியாவுக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ் செய்துள்ளார்.