1800 நடன கலைஞர்கள்..100 பாடல்கள்.. பிரபுதேவா முன்னிலையில் உலக சாதனை.!
திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த மாதவரம் பகுதியில், சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு, நடிகர் பிரபுதேவா முன்னிலையில் ‘நம்ம மாஸ்டர் நம்ம முன்னாடி’ என்ற உலக சாதனை நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில், 1800 நடன கலைஞர்கள் பங்கேற்று பிரபுதேவாவின் 100 பாடல்களுக்கு 100 நிமிடங்கள் நடனமாடி உலக சாதனை படைத்தனர். இந்த சாதனை நிகழ்வை பிரபுதேவா, நாற்காலியில் அமராமல் மேடையில் நின்றபடியே மெய்சிலிர்த்து ரசித்தார்.
இதற்கு முன்னதாக, கடந்த மே 2ம் தேதி சென்னையில் நடைபெறவிருந்த இந்த உலக சாதனை நடன நிகழ்ச்சி தோல்வியில் முடிந்தது. ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர், நடனக் கலைஞர்கள் நடனமாட வந்தனர். சர்வதேச நடனத் தினத்தை முன்னிட்டு தனியார் அமைப்பின் சார்பாக,” நமது மாஸ்டர் நமது முன்னாடி” என்ற தலைப்பின் கீழ், இந்த உலக சாதனை நிகழ்வு சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன, மேலும் இதில் நாதபுயல் பிரபுதேவாவும் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி காலை 6 மணிக்கு தொடங்கி 7.30 மணிக்கு முடிவடையும் என்றும், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களிடம் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது.
ஆனால், காலை 9 மணி ஆகியும் நிகழ்ச்சி தொடங்காததால், வெயிலில் காத்திருந்த சிறுவர்கள் மயக்கமடைந்தனர். இதனால், பெற்றோர்கள் விழா ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில், உடல்நலக்குறைவால் தன்னால் நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை என ஐதராபாத்திலிருந்து காணொலி காட்சி மூலம் மன்னிப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அன்று முடியாதது இன்று மாணவர்கள் சுமார் 100 நிமிடங்கள் தொடர்ந்து 100 பாடல்களுக்கு நடனமாடி அசத்தினர்.