வினாடிக்கு 1.34 லட்சம் கன அடி ..! 107-ஐ தொட்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம்!!
மேட்டூர் : கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியது, இருந்தாலும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தன. இதனை தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு இடங்களில் பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்தது.
மேலும், கிருஷ்ணராஜ் அணை முழு கொள்ளளவை எட்டியதால் நேற்று அந்த அணையிலிருந்து வினாடிக்கு 1.31 லட்ச கன அடியும், கபினி அணையிலிருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீரும் என மொத்தமாக 1.66 கனஅடி நீர் தமிழகத்திற்கு காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டன.
அதன் பிறகு நேற்று இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1.41 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அதன் பின் இன்று காலை நிலவரப்படி, ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து விநாடிக்கு 1.52 லட்சம் கன அடியாக உயர்ந்தது. மேலும், காவிரியில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும், கர்நாடக அணைகளில் நீர் அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதனால், அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால், இன்று காலை மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1.34 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மேலும், அணையின் நீர் மட்டம் 107 அடியாகவும், நீர் இருப்பு 75.167 டி.எம்.சி. ஆகவும் இருக்கிறது. இப்படி தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காவேரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.