நிதி ஆயோக் : ஆஃப் செய்யப்பட்ட மைக்., கோபமாக வெளியேறிய மம்தா.!
டெல்லி: இன்று பிரதமர் மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் பாஜக ஆதரவு மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். மம்தா பேனர்ஜியை தவிர இந்தியா கூட்டணியில் உள்ள மாநில முதலமைச்சர்கள் பல்வேறு காரணங்களால் கலந்துகொள்ளவில்லை.
மத்திய பட்ஜெட்டில் மேற்கு வங்க மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தான் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் தான் பங்கேற்க உள்ளதாக முன்னதாக அறிவித்த மம்தா, இன்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார்.
நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் தொடங்கிய சில மணிநேரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். தான் ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில் தனது மைக் ஆஃப் செய்யப்பட்டதாகவும், தன்னை பேச விடாமல் தடுத்ததாகவும் குற்றசாட்டை முன்வைத்தார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பேனர்ஜி, ” மாநில அரசுகளுக்கு எதிராக நீங்கள் (மத்திய அரசு) பாரபட்சம் காட்டக் கூடாது என்று குறிப்பிட்டேன். நான் கூட்டத்தில் தொடர்ந்து பேச விரும்பினேன். ஆனால், 5 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டது. எனக்கு முன் இருந்தவர்கள் 10 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினார்கள். எதிர்க்கட்சியில் இருந்து நான் மட்டுமே கலந்து கொண்டேன். அதனால் என்னை பேச அனுமதிக்கவில்லை.
நான் ஆலோசனை கூட்டத்தில் பேசி கொண்டிருந்தேன். அப்போது எனது மைக் ஆஃப் செய்யப்பட்டது. ஏன் என்னை தடுத்தீர்கள். ஏன் பாகுபாடு காட்டுகிறீர்கள் என்று கேள்வி கேட்டேன். உங்கள் கட்சி , மற்றும் உங்கள் கூட்டணி கட்சிகளுக்கு அதிக வாய்ப்பை வழங்குகிறீர்கள். எதிர்க்கட்சியில் இருந்து நான் மட்டும் தான் இங்கு இருக்கிறேன். என்னை பேசவிடாமல் ஏன் தடுக்கிறீர்கள். இது மேற்கு வங்கத்தை மட்டுமல்ல, அனைத்து பிராந்திய கட்சிகளையும் அவமதிக்கும் செயலாகும் என டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி குறிப்பிட்டார்.