வீரருக்கு 30 லட்சம் முதல் 3 கோடி வரையில் சம்பளம் அளிக்கலாம்..! பிசிசிஐயை பரிந்துரைக்கும் ஐபிஎல் அணிகள் ..!
ஐபிஎல் : ஐபிஎல் தொடரில் நடக்கவிருக்கும் மெகா ஏலத்தின் விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என ஐபிஎல் அணிகள் பரிந்துரை செய்து வருகின்றனர்.
ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலத்துக்கான ஐபிஎல் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் வரும் ஜூலை 30 மற்றும் ஜூலை-31 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வீரர்களை ரீடெய்ன் செய்வதற்கான விதிகள், ஆர்டிஎம் (RTM), இம்பேக்ட் பிளேயர் விதி என பலவற்றை குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
ஏற்கனவே ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியும், நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடரின் சாம்பியனுமான கொல்கத்தா அணி தரப்பில் ஒரு வீரரை மட்டும் ரீடெய்ன் செய்ய அனுமதி கொடுத்து விட்டு, 8 ஆர்டிஎம் வாய்ப்புகளை அளிக்கலாம் என்று பிசிசிஐயை பரிந்துரை செய்தனர். அதே போல் மற்றொரு நட்சத்திர அணியான மும்பை அணி தரப்பில் 5 அல்லது 6 வீரர்களை ரீடெய்ன் செய்ய அனுமதிக்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தனர்.
மேலும், அவர்களை தொடர்ந்து பஞ்சாப், டெல்லி, லக்னோ போன்ற அணிகள் வழக்கம் போல 3 வீரர்களை கடந்து ரீடெய்ன் செய்யும் எண்ணிக்கையை அதிகரிக்க கூடாது என்று பரிந்துரை செய்தனர். இதனால், சிறிய அணிகளாக கருதப்படும் டெல்லி, பஞ்சாப், லக்னோ போன்ற அணிகளில் விளையாடும் இளம் வீரர்களை பாதுகாக்கவும், அவர்கள் நன்றாக செயல்பட்டால் அவர்களின் ஆண்டு ஊதியத்தை அதிகரிக்கவும் பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அணிகள் பரிந்துரை செய்தனர்.
இதற்கு முக்கிய காரணம், ஒரு இளம் வீரர் ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டால், அவரின் ஊதியம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மெகா ஏலம் வரை ரூ.20 லட்சமாகவே இருக்கும். இதனால் அந்த ஒரு குறிப்பிட்ட வீரர் மட்டும் அந்த அணியை விட்டுவிட்டு ஏலத்திற்கு செல்ல விரும்புவார்.
இதனால் ஒரு இளம் வீரர் சிறப்பாக செயல்பட்டால், ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அந்த இளம் வீரர், அந்த சீசனில் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் அவருக்கு ரூ.3 கோடி வரையில் சம்பளத்தை உயர்த்தும் ஒப்பந்தம் அளிக்கலாம் என்று ஒரு சில ஐபிஎல் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இதனை எல்லாம் தாண்டி மெகா ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளின் ரூ.100 கோடியில் இருக்கும் பர்ஸ் வேல்யூவையும் (Purse Value) ரூ.130 கோடி முதல் ரூ.140 கோடியாக அதிகரிக்க வேண்டும் என்று ஐபிஎல் அணிகள் பிசிசிஐக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி ரூ.30 கோடி முதல் ரூ.40 கோடி வரை அதிகரித்தால், வீரர்களின் மதிப்பும் ஊதியமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.