உலக சாதனையுடன் விடை பெறுகிறார் குக்..!!
சர்வதேச போட்டிகளின் அத்தியாயம் முடிந்தது…
லண்டன்: இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் சதம் விளாசி சாதனை படைத்ததோடு சர்வதேச போட்டிகளில் இருந்து விடை பெற்றார். இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அலெஸ்டர் குக், முன்னாள் டெஸ்ட் கேப்டனாகவும் இருந்தவர். உலகின் முன்னணி டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படும் குக், கடந்த வாரம் சர்வேதச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்தியாவுக்கான கடைசி டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்த குக், இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 71 ரன்கள் அடித்துச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி 292 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் மீண்டும் களமிறங்கியுள்ள, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் குக் சதம் விளாசியுள்ளார். குக் சதமடித்தபோது மைதானத்தில் கூடியிருந்தவர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர். சில நிமிடங்களுக்கு மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் பலத்த கரவொலி எழுப்பினர்.
33 வயதாகும் குக், இந்தப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 12,448 ரன்கள் அடித்து, அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் இடது கை பேட்ஸ்மேன்களில் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் குக் படைத்துள்ளார். தன் கடைசி இன்னிங்சில் சதம் விளாசி உலக சாதனை படைத்த குக்குக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இப்போட்டியில் 147 ரன்கள் எடுத்து குக் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இந்திய வீரர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். தான் விளையாடிய முதல் சர்வதேச போட்டியிலும், கடைசி சர்வதேச போட்டியிலும் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை குக் படைத்துள்ளார்.
DINASUVADU