தொலைநோக்கு பார்வையுடன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்.! பிரதமர் மோடி புகழாரம்.!
டெல்லி: மத்திய பட்ஜெட் 2024 இன்று தாக்கல் செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடி தனது கருத்துக்களை கூறினார். அதில், இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரமளிக்கும் வகையில் உள்ளது என குறிப்பிட்டார்.
இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக பணிபெண்களுக்கு தங்கும் விடுதிகள், சோலார் மூலம் 300 யூனிட் இலவச மின்சாரம், முதல் முறை வேலைக்கு செல்வோருக்கு உதவித்தொகை, வேளாண்துறைக்கு 1.52 லட்சம் கோடி ரூபாய் என பல்வேறு திட்டங்கள் இடம்பெற்று இருந்தன.
இந்த பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்த பின்பு பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய பட்ஜெட் அனைத்து மக்களையும் பலப்படுத்தி உள்ளது. இது தொலைநோக்குடன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட். நமது சமூகத்தின் ஒவ்வொரு அடுக்குகளையும் மேம்படுத்தி, அனைவருக்கும் அதிகாரமளிக்கும் பட்ஜெட். அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை வழிவகைக்கும் பட்ஜெட் என குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில், இந்த பட்ஜெட் நடுத்தர வர்க்கத்து மக்களையும் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு உதவும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இந்த பட்ஜெட் பழங்குடியினர் சமூகம், தலித், பிற்படுத்த வகுப்பிற்கு அதிகாரம் அளிக்கும்வகையில் வலுவான திட்டங்களை கொண்டுவந்துள்ளது. இந்த பட்ஜெட் பெண்களின் பொருளாதார பங்களிப்பை உறுதி செய்ய உதவும்.
சிறுவணிகர்கள், சிறுகுறு தொழிலாளர்கள் முன்னேறுவதற்கு புதிய பாதையை இந்த பட்ஜெட் வழங்கியுள்ளது. பட்ஜெட்டில் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். இளைய தலைமுறையினருக்கு முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு வாய்ப்புகள் இந்த பட்ஜெட்டில் ஏரளமாக உள்ளன என பட்ஜெட் குறித்து தனது பாராட்டுகளை பிரதமர் மோடி தெரிவித்தார்.