மத்திய பட்ஜெட் 2024 : டெல்லியில் தொடங்கிய அனைத்துக்கட்சி கூட்டம்.!
டெல்லி: நடப்பு ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 22) முதல் தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் 2024-2025-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள பாஜக, இந்த முறை தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து NDA தலைமையிலான ஆட்சி நடபெற்று வருகிறது. இதனால், இந்த முறை கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளையும் கவனத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
அதேபோல, இந்த முறை மற்ற எதிர்க்கட்சிகளின் பலமும் அதிகரித்து உள்ளதால் அவர்களின் குரலும் நாடாளுமன்றத்தின் பலமாக எதிரொலிக்கும் என கூறப்படுகிறது. இதனால் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது.
நாளை மறுநாள் பட்ஜெட் கூட்டம் நடைபெற உள்ளதால், அதற்கு முன்னதாக இன்று அனைத்து கட்சி கூட்டத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூட்டியுள்ளார். இதில் அனைத்துக்கட்சி பிரதிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது .
இன்று மேற்குவங்கத்தில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுவதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மற்ற பெரும்பாலான கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன. திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தற்போது மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ, ஜே.பி.நட்டா தலைமையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.