ஒலிம்பிக்கை குறிக்கும் 5 வளையங்கள் எதனை குறிக்கிறது.? 4 ஆண்டுக்கு ஒருமுறை ஏன்.?
பாரிஸ் ஒலிம்பிக் 2024: 33-ஆவது ஒலிம்பிக்ஸ் திருவிழா பாரிஸில் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வரத் தொடங்கியுள்ளனர். 206 நாடுகளை சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்தியா சார்பில் தடகளம், பேட்மிட்டன், குத்து சண்டைஎன 16 வகையான போட்டிகளில் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். பாரிஸ் நகரைச் சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஒலிம்பியாட்டின் தொடக்கத்திலும் கிரேக்கக் கடவுள் ஜீயஸைக் கௌரவிப்பதற்காக ஒலிம்பிக் நடத்தப்பட்டது. இது நான்கு ஆண்டு காலத்தை வரையறுக்கிறது.
4 ஆண்டுக்கு ஒருமுறை ஏன்?
பண்டைய கிரேக்கர் காலத்தில் ஒலிம்பிக்ஸ் போட்டி, ஒலிம்பியாட் நாள்காட்டியின்படி நடத்தப்பட்டுள்ளது. அந்த நாள்காட்டி 4 ஆண்டுகள் கொண்டதென்பதால், கிரேக்க கடவுள் ஜீயுஸுக்கு மரியாதை அளிக்கும்வகையில் ஆண்டு தொடக்கத்தில் போட்டி நடத்தப்பட்டது.
393 கி.பி.க்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகள் நிறுத்தப்பட்டன, பிரான்சின் கூபெர்ட்டின் முயற்சியால் 1892இல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது, பழங்கால முறைப்படி போட்டி நடத்த முடிவெடுக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக டோக்கியோவில் கோடைகால விளையாட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது குறிப்பிடத்தக்கது.
கொடியின் 5 நிற வளையங்கள் ஏன்?
நவீன கால ஒலிம்பிக்ஸ் தந்தையான பிரான்சை சேர்ந்த குபெர்டின் 1913-இல் ஒலிம்பிக்ஸ் கொடியை உருவாக்கினார். அதில் வெள்ளை நிற பின்னணியில் 5 நிறங்களில் வளையங்கள் இருக்கும்.
கொடியானது நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை மற்றும் சிவப்பு ஆகிய ஐந்து கலரை கொண்ட வளையங்கள் சமமாக ஒன்றோடொன்று தாங்கி, இரண்டு வளையங்கள் வெட்டும் இடங்களிலெல்லாம் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட ஒரு வெள்ளைப் புலத்தைக் கொண்டிருக்கும். கொடியின் அகலம்-நீளம் விகிதம் 2:3 ஆகும்.
அந்த வளையங்கள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்களை குறிக்கிறது என்றும், அதிலுள்ள 6 நிறங்கள் ஒலிம்பிக்ஸில் விளையாடும் நாடுகளின் தேசிய கொடிகளில் இடம்பெற்றிருக்கும் என்றும் தீட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒலிம்பிக் சின்னம் ஒலிம்பிக் இயக்கத்தின் செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது, அந்த ஐந்து கண்டங்களின் ஒன்றியம் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்களின் சந்திப்பையும் குறிக்கிறது.
இந்தியா வென்ற பதக்கங்கள் :
இந்தியா 1900-ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்ஸில் பங்கேற்று வருகிறது. இதுவரை 35 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன. அவற்றில் தனிநபர் பிரிவுகளில் 2008 பீஜிங் ஒலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதலில் அபிநவ் பிந்த்ரா, 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வென்ற தங்க பதக்கங்களும் அடங்கும். இதையடுத்து தற்போது அதிக பதக்கம் வெல்லும் முனைப்புடன் பாரீஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியா பங்கேற்கிறது.