தூத்துக்குடி தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு விபத்து.! 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.!

Ammonia Gas Leak in Thoothukudi Private Sea Food Processing Factory

தூத்துக்குடி: புதூர் பாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மீன் பதன ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவால் 30 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியபுரத்தில் தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தனியார் மீன் பதன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் மீன்களை பதப்படுத்தி அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வேலைகள் நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட, வெளிமாநில பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த தனியார் தொழிற்சாலையில், நேற்று இரவு 11 மணியளவில், மின்கசிவு ஏற்பட்ட காரணத்தால் அம்மோனியா சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு அம்மோனியா வாயு ஆலையில் பரவியதாக கூறப்படுகிறது. இதனால் அப்போது வேலை பார்த்து வந்த பெண்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டது.

இதனை அடுத்து, உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு தொழிற்சாலை வாகனம், மற்றும் அம்புலன்ஸ் உதவியுடன் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் முதற்கட்டமாக கும்பகோணத்தை சேர்ந்த 5 பெண்கள், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 16 பெண்கள் என 21 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.

பின்னர் காவல்துறை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது வரையில் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த 29 பேர் மற்றும் ஒரு தீயணைப்பு வீரர் உட்பட மொத்தம் 30 பேர் அம்மோனியா வாயுவால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கசிவு விபத்து குறித்து புதியம்புத்தூர் காவல்நிலையத்தில் புகார் பதியப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பிலும் ஒரு குழுவினர் ஆலையை ஆய்வு செய்து வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்