விமான பயணிகள் கவனத்திற்கு… அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்.!
மைக்ரோசாப்ட் : உலகம் முழுவதும் விண்டோஸ் 11 இயங்குதளம் பயன்படுத்தும் பயனர்கள் தங்கள் கணினி முகப்பு திரையில், “உங்கள் கணினி சிக்கலில் உள்ளது. நாங்கள் அதற்கான புகார்களை சேகரித்து வருகிறோம். நீங்கள் உங்கள் கணினியை ரீ-ஸ்டார்ட் செய்துகொள்ளுங்கள் ” என நீல நிற திரை காண்பிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுக்க பல்வேறு கணினி பயனாளர்கள், பிரதான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாங்கள் மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ” என்று மைக்ரோசாப்ட் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் இயங்குதள சேவை பாதிப்பால், இந்திய விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், விமான சேவை நிறுவனங்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து தங்கள் பயணாளிகளுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர்.
இண்டிகோ விமான சேவை நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், “எங்கள் கணினிகள் தற்போது மைக்ரோசாஃப்ட் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. இது மற்ற நிறுவனங்களையும் பாதித்துள்ளது. இந்த நேரத்தில் முன்பதிவு, செக்-இன், உங்கள் போர்டிங் பாஸ் அணுகல் மற்றும் சில விமானங்கள் பாதிக்கப்படலாம்.” என பயணாளிகளுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், “நாங்கள் தற்போது சில தொழில்நுட்ப சவால்களை சந்தித்துள்ளோம். முன்பதிவு, செக்-இன் மற்றும் முன்பதிவு செயல்பாடுகளை நிர்வகித்தல் உள்ளிட்ட ஆன்லைன் சேவைகளை இந்த தொழில்நுட்ப சவால்கள் பாதிக்கிறது.
இதன் விளைவாக, நாங்கள் விமான நிலையங்களில் நேரடியாக செக்-இன் மற்றும் போர்டிங் செயல்முறைகளை செயல்படுத்தியுள்ளோம் என்பதை நாங்கள் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வரவிருக்கும் பயணத் திட்டங்களைக் கொண்ட பயணிகள் எங்கள் கவுன்டர்களில் நேரடியாக செக்-இன் செய்வதற்க்கு வழக்கத்தை விட முன்னதாகவே விமான நிலையத்திற்கு வாருங்கள் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பதிவிட்டுள்ளது.
டெல்லி விமான நிலையம் தனது சமூக வளைத்த பக்கத்தில், “உலகளாவிய தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, டெல்லி விமான நிலையத்தின் சில சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. எங்கள் விமானப் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க நாங்கள் எங்கள் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். பயணிகள் விமான நிறுவனத்துடன் தொடர்பில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதுப்பிக்கப்பட்ட விமானத் தகவலுக்கு நேரடி உதவி மையத்தை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.