21 கோடி ரூபாய்.! அம்மா உணவகங்களுக்காக முதல்வர் புதிய உத்தரவு.!
சென்னை: கடந்த 2013இல் அதிமுக ஆட்சிக்காலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம் அம்மா உணவகம். இதன் மூலம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் , அதிமுக ஆட்சியை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சிக்காலத்திலும் அதே பெயரில் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் தனது அலுவல் பணிகள், நலத்திட்ட பணிகளை முடித்துக்கொண்டு, பின்னர், தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு உணவருந்த வந்தவர்களிடம் உணவின் தரம் பற்றி கேட்டறிந்தார். பின்னர் பொருட்களின் இருப்பு, சேவை பற்றி கேட்டறிந்து கொண்டார். அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபர் உடன் இருந்தார்.
இந்த ஆய்வு முடித்த பின்னனர் சென்னை மாநகராட்சியில் உள்ள உள்ள 388 அம்மா உணவகங்களின் தரத்தை மேம்படுத்த 21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதேபோல மற்ற பகுதிகளிலும் அமைச்சர்கள் , சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்கள் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.