ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது… எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி முடிவு.!
சென்னை: பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆமர்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னையை அடுத்த பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முன்னதாக 11 பேர் கைதாகி இருந்தனர். அதில் ரவுடி திருவெங்கடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று அதிமுக பிரமுகர் வழக்கறிஞர் மலர்க்கொடி, திமுக பிரமுகரின் மகன் சதீஷ், மற்றொரு அரசியல் பிரமுகர் ஹரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் பாஜக பிரமுகர் அஞ்சலை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தை சேர்ந்த மலர்க்கொடி சேகரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பை வெளியிட்டார்.
கைதான மலர்க்கொடி, திருவல்லிக்கேணி மேற்குப்பகுதி கழக இணை செயலாளராக பொறுப்பில் இருந்துள்ளார். இவர் கட்சி சட்டதிட்டங்களுக்கு முரணாக நடந்து கொண்டதாகவும், கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/6gJvsAypyw
— AIADMK – Say No To Drugs & DMK (@AIADMKOfficial) July 18, 2024