மனைவி உட்பட 42 பெண்களை கொன்று வீசிய கொடூர சீரியல் கில்லர் கைது.!
கென்யா : நைரோபியில் தனது மனைவி உட்பட 42 பெண்களை கொன்று, உடல் உறுப்புகளை குப்பை கிடங்கில் வீசிய கொடூர சீரியல் கில்லரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தொடர் கொலையாளியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தனது மனைவி உட்பட 42 பெண்களைக் கொன்று, உடல்களை குப்பைக் கிடங்கில் வீசியதை ஒப்புக்கொண்டார்.
கென்யாவின் தலைநகர் நைரோபியில் தொடர் கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் தொலைபேசியைக் கண்காணிப்பதன் மூலம், 33 வயதான காலின்ஸ் ஜுமைசி கலுஷா என்ற சந்தேக நபரை அதிகாரிகள் அடையாளம் காண முடிந்தது.
பின்னர், அவர் நைரோபியின் பெரிய குப்பை கொட்டும் இடத்திற்கு அருகில் தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரை தேடி போலீசார், அங்கு சென்று சோதனை செய்ததில், ஜூமைசி வீட்டில் இருந்து உயிரிழந்தவர்களின் அடையாள அட்டைகள், மொபைல், உறுப்புகளை வெட்ட பயன்படுத்திய கத்தி, ரப்பர் கையுறை, டஜன் கணக்கிலான நைலான் சாக்கு பைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, யூரோ கோப்பை இறுதிப் போட்டியைக் காணச் சென்ற காலின்ஸ் ஜுமைசி கலுஷா (கொலையாளி) தலைநகர் நைரோபியின் சோவெட்டோ பகுதியில் உள்ள பார் ஒன்றில் கைது செய்யப்பட்டார்.
அவர், 2022ஆம் ஆண்டு தனது மனைவியை முதலில் கொன்றுள்ளார். இதுவரை ஒன்பது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது உடல்கள் நைரோபியில் உள்ள மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிசார் தகவல் தெரிவித்துள்ளன. முதல் ஆறு உடல்கள் நைரோபியின் முகுரு குவா என்ஜெங்கா சுற்றுப்புறத்தில் இருந்து உள்ளூர் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.