குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு.!
வானிலை நிலவரம் : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் வரும் 19ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் கனமழையும், கேரளாவில் மிக கனமழையும், கடலோர கர்நாடகா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் அதி கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்கத்தில், இன்று 7 முதல் 11 செ.மீ மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொள்ளாச்சி அருகே உள்ள கவியருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோலையாறில் 14 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. மேலும், கனமழை காரணமாக பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில், 23-24 இடையிலான கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, மீனவர்கள் ஜூலை 15 மற்றும் 16 க்கு இடையில் தெற்கு வடமேற்கு மேற்கு மத்திய வங்காள விரிகுடாவை ஒட்டியுள்ள கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.