8,000 கனஅடி தான்.., அடம்பிடிக்கும் கர்நாடகா.! தமிழக முதல்வருடன் முக்கிய ஆலோசனை…
வேலூர்: காவிரி விவகாரம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
கடந்த வாரம் நடைபெற்று முடிந்த 99வது காவிரி ஒழுங்கற்று குழு ஆலோசனை கூட்டத்தில், கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தினசரி 1 டிஎம்சி தண்ணீர் வீதம் அடுத்த 30 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்ற பரிந்துரையை (உத்தரவை) முன்வைத்தது. ஆனால் அதனை ஏற்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது.
நேற்று முன்தினம் காவிரி விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் உள்ளிடடோர் ஆலோசனை மேற்கொண்டு, காவிரியில் போதுமான அளவு தண்ணீர் இல்லை. அதனால், காவிரி ஒழுங்காற்று குழு கூறிய அளவுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து முடியாது என கூறப்பட்டது. மேலும், கர்நாடக அணையில் இருந்து தினமும் 8000 கனஅடி தண்ணீர் தான் திறந்து விட முடியும் என கூறப்பட்டது.
இதனை அடுத்து இன்று வேலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆலோசனைக்கு பிறகு இதுவரை தமிழகத்திற்கு 4047 கனஅடி தண்ணீர் தான் வந்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு ஒரு வேண்டுகோள் (அ) உத்தரவை கர்நாடக அரசுக்கு தெரிவித்தது.
நமக்கு (தமிழகத்திற்கு) தர வேண்டிய தண்ணீர் நிறைய உள்ளது. ஆனால் தற்போது அடிப்படை தேவையை போக்குவதற்கு ஒரு நாளைக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கூறினார்கள். அனால் அதனை கூட தரமாட்டேன் என அடம் பிடிக்கிறது கர்நாடக அரசு. இதுவரை நாங்கள் எங்கள் நிலைமைகளை விளக்கி கூறினோம். ஆனால் கர்நாடக அரசு 1 டிஎம்சி தர முடியாது என கூறிவிட்டு, வெறும் 8000 கனஅடி நீர் மட்டுமே தருவேன் என கூறுகிறார்கள். கபினியில் தண்ணீர் பெருமளவு வந்து கொண்டு தான் இருக்கிறது. காவிரியில் போதுமான அளவில் தண்ணீர் இருக்கிறது இருந்தும் கர்நாடக அரசு தண்ணீர் தர மறுக்கிறது. இதுகுறித்து தமிழக முதல்வரிடம் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.