காலை உணவுத் திட்டம் – அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் தொடக்கம்!
சென்னை : அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம், காமராஜர் பிறந்த நாளன்று (ஜூலை 15) தொடங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனை திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி, காலை உணவுத் திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் சூழலில், இந்தத் திட்டம் தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இந்த ஆண்டின் கல்வி வளர்ச்சி நாளில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், முதலமைச்சர் முக.ஸ்டாலின் 15,7.2024 அன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடங்கிவைக்கிறார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகம் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 இலட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இந்த ஆண்டின் கல்வி வளர்ச்சி நாளில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி வைக்கப்படுகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கிவைக்கிறார்கள்.#CMMKSTALIN | #TNDIPR | pic.twitter.com/ljaDIkMOu5
— TN DIPR (@TNDIPRNEWS) July 13, 2024