தலைவருக்கான பண்பு சீமானிடம் இல்லை.. கீதாஜீவன் பரபரப்பு பேட்டி.!

NTK Leader Seeman - Minister Geetha Jeevan

தூத்துக்குடி: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு தலைவருக்கான பண்பு இல்லை என அமைச்சர் கீதாஜீவன் விமர்சனம் செய்யப்பட்டுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் பேசுகையில்,  முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றியும், திமுகவினர் பற்றியும் கடுமையாக விமர்சித்தார். மேலும் இதுபற்றி பாடல் ஒன்றையும் குறிப்பிட்டார். இதனை அடுத்து, சாதிய ரீதியில் கலைஞர் கருணாநிதியை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்ததாக கூறி திருச்சி சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று சாட்டை துறைமுருகன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், அவரை சிறையில் வைக்க வேண்டியதில்லை என்று கூறி துரைமுருகன் விடுவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நேற்று செய்தியாளர் சந்திப்பில், மீண்டும் அதே பாடலை பாடி, இப்போது நான் அந்த பாடலை பாடிவிட்டேன். என்னை கைது செய்யுங்கள் என கூறினார். இதனை தொடர்ந்து சென்னை காவல் ஆணையரிடத்தில் வழக்கறிஞர் நடராஜன் என்பவர் சீமான் மீது புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து இன்று தூத்துக்குடியில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்துக்களையும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீதான தனது விமர்சனங்களையும் முன்வைத்தார். அவர் கூறுகையில், தலைவருக்கு உரிய பண்பு இல்லாமல் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செயல்பட்டு வருகிறார். கலைஞர் மறைவின் போது, எதிர்கால இளைஞர்களுக்கு கலைஞர் ஓர் முன்னுதாரணம். ஓய்வறியா உழைப்பாளி. தமிழக அரசியல் ஆளுமை என்றெல்லாம் புகழ்ந்தவர் சீமான்.

ஆனால், இப்போது அதனை மாற்றி பேசுகிறார். நாங்கள் எங்கள் தலைவர் கண்ணசைவுக்காகதான் காத்திருக்கிறோம். நாங்கள் ஆளும் இடத்தில் கட்டுப்பட்டு இருக்கிறோம். அருண் என்பவர் புகார் அளித்ததன் பெயரில் தான் துரைமுருகன் கைது செய்யப்பட்டார். சாதிப் பெயர் கூறியதால் தான் துரைமுருகன் கைது செய்யப்பட்டார். தற்போது  அதே வார்த்தையை சீமான் கூறுகிறார். பட்டியலின மக்கள் பற்றி வாய்க்கு வந்தபடி பேசுவது ஓர் தலைவருக்கு உரிய பண்பு இல்லை. இவ்வாறு சீமான் பேசி வருவதை திமுக வன்மையாக கண்டிக்கிறது என்று அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்