’60 ஆண்டுக்கு பின் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது’ – ரஷியாவில் பிரதமர் மோடி பேச்சு

PM Modi - Vladimir Putin

ரஷ்யா : 2 நாள் பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் மேற் கொண்டுள்ளார் பிரதமர் மோடி. அங்கு ரஷ்யா அதிபர் புதினின் வரவேற்புக்கு பதிலளித்து பேசி இருக்கிறார்.

ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோ புறப்பட்டு சென்றார். அங்கு விமான நிலையம் சென்றடைந்த மோடியை, ரஷ்யா நாட்டின் மூத்த துணைப் பிரதமரான டெனிஸ் மான்டுரோவ் வரவேற்றார். அதன் பிறகு மோடிக்கு பாரம்பரிய முறைப்படி ராணுவ மரியாதையுடனான வரவேற்பும் வழங்கப்பட்டது.

அதன் பின் விமானம் நிலையத்திலிருந்து மோடியை புதினின் நோவோ-ஓகாரியோவோவில் உள்ள் அதிபர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். புதினின் வரவேற்புரைக்கு பதிலளித்து பிரதமர் மோடி கூறியதாவது: ஒரு நண்பரை அவரது இல்லத்தில் சந்திப்பது என்பது எப்போதுமே மகிழ்ச்சியானது. அப்படிப்பட்ட சுவாரஸ்யமான நிகழ்வை நீங்கள் ஏற்படுத்திக் கொடுத்ததற்காக நான் நன்றி கூறிக் கொள்கிறேன். தங்களுடைய இதமான வார்த்தைகளுக்கு நான் நன்றியுரைக்கிறேன்.

அங்கு, பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்து பேசினார்கள். பிரதமர் மோடியை வரவேற்று பேசிய ரஷ்ய அதிபர் புதின், “மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இது ஒரு தற்செயலான விஷயம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இது நீங்கள் பல ஆண்டுகளாக நாட்டின் தலைவராக உழைத்ததற்கான பலன் என்று தான் கூறுவேன்.

உங்களிடம் சொந்த யோசனைகள் அதிகம் உள்ளது. நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்க நபர். இந்தியா மற்றும் இந்திய மக்களின் நலன்கள் குறித்த முடிவுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அதன் விளைவுகள் வெளிப்படையானவை, மேலும் பொருளாதார அடிப்படையில் பார்த்தால் இந்தியா உலகின் 3-வது இடத்தில் உள்ளது.

PM Modi - Vladimir Putin
PM Modi – Vladimir Putin [file image]
உங்கள் முழு வாழ்க்கையையும் உங்கள் நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்துள்ளீர்கள். இதனை இந்திய நாட்டின் மக்கள் நன்கு அறிவார்கள்”, என்று புதின் மோடியை வரவேற்று கூறினார். அதற்கு பிரதமர் மோடி, “நீங்கள் சொல்வது உண்மை தான். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஜனநாயகத்தின் தாயகமாக இந்தியா இருந்து வருகிறது. அதனால், இந்தியவில் நடைபெறும் தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த தேர்தலில் 65 கோடி இந்திய மக்கள் வாக்களித்துள்ளனர்.

மேலும், கடந்த 60 ஆண்டுகளில் முதன் முறையாக தொடர்ச்சியாக 3வது முறை ஒரே அரசு ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த சாதனையை இதற்கு முன்னதாக ஜவஹர்லால் நேரு செய்திருந்தார். 60 ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு அந்த அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய மக்கள் அனைவரும் எனது தாய்நாட்டுக்கு சேவை செய்ய எனக்கு இன்னொரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார்கள்.

நான் 10 ஆண்டுகளாக சேவையாற்றிவருகிறேன். சீர்திருத்தம், செயல்படுத்துதல், புதிய மாற்றம் இது தான் எனது கொள்கை ஆகும். இந்திய மக்கள் இந்த கொள்கைக்காகத்தான் வாக்களித்து உள்ளனர். எனது 3-வது முறை ஆட்சியில் நான் மூன்று மடங்கு இன்னும் கடினமாக உழைப்பேன் என நம்பிக்கையுடன் இருக்கிறேன். எனக்கு எப்போதும் ஒரே ஒரு குறிக்கோள் தான் இருக்கிறது, அது தான் என் நாடும்.. என் நாட்டு மக்களும்”, என்று பதிலளித்து கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்