வாயால் வடை சுடும் அண்ணாமலை… இபிஎஸ் கடும் விமர்சனம்.!

BJP State president Annamalai - ADMK Chief secratory Edappdi Palanisamy

கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார். பொய் வாக்குறுதிகளை கூறுகிறார் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. இதனை குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது விமர்சனங்களை முன்வைத்தார். அதிமுக போட்டியிட்டு இருந்தால் 3வது, 4வது இடம் தான் பிடித்து இருக்கும் என பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து இருந்தார். இந்த விமர்சனங்கள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை அரசியல் ஞானி :

இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு என ஏற்கனவே அறிவித்து, அதற்கான காரணத்தையும் தெரிவித்துவிட்டோம். அப்படி இருக்கையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவை குறைசொல்லி, திட்டமிட்டு பேசியிருக்கிறார். அதிமுக போட்டியிட்டு இருந்தால் 3வது 4வது இடம் பெற்றுஇருக்கும் என தெரிவித்து இருக்கிறார். அவர் ஒரு அரசியல் ஞானி. அவரது கணிப்பு அப்படி உள்ளது.

எங்கள் கூட்டணியில் அண்ணாமலை :

விக்கிரவாண்டி தொகுதி உள்ள விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரை விட 6,800 வாக்குகள்தான் அதிமுக வேட்பாளர் குறைவாக பெற்றுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தற்கு பல்வேறு காரணங்களை நாங்கள்  கூறியுள்ளோம். ஈரோடு இடைத்தேர்தலில் திமுக எப்படி வெற்றி பெற்றது என நாடே அறியும். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை. இது அண்ணாமலைக்கு தெரியும். அப்போது அவரும் எங்கள் கூட்டணியில் இருந்தார். அப்படி இருக்கையில் இவ்வாறு அவர் விமர்சிப்பது கண்டிக்க தக்கது.

2014 தேர்தல் vs 2024 தேர்தல் :

அண்ணாமலை பதவியேற்றப்பிறகு தான் பாஜக வளர்கிறது என்ற பிம்பத்தை அவர் உருவாக்க பார்க்கிறார். கடந்த 2014 தேர்தலில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு இருந்தார். அவர் 42,000 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியடைந்தார். ஆனால் அதே தொகுதியில் 2024இல் அண்ணாமலை போட்டியிட்டு திமுக வேட்பாளரை விட சுமார் 1 லட்சத்திற்கும் மேலான வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியடைந்துள்ளார்.  2014இல் பாஜக வாக்கு சதவீதம் 18.80 ஆகும். 2024இல் 18.28 ஆக குறைந்துள்ளது.

வாயால் வடை சுடுகிறார் :

தினமும் பேட்டி கொடுத்து அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். மாநில தலைவராக இருந்து என்ன புதிய திட்டம் தமிழகத்திற்கு என்று கொண்டு வந்தார்.? கோவையில் 100 வாக்குறுதிகள் 500 நாளில் நிறைவேற்றம் செய்யப்படும் என பொய் சொல்லி தான் கோவையில் இவ்வளவு வாக்குகள் பெற்றார். அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார்.

பாஜகவின் தோல்வி:

மத்தியில் பாஜக ஆட்சி தான் நடைபெறுகிறது. முடிந்தால் அந்த 100 வாக்குறுதிகளை நிறைவேற்ற செய்யுங்கள். கடந்த முறை 300 இடங்களை வென்று தனியாக ஆட்சியை பிடித்த பாஜக, இம்முறை இப்படிப்பட்ட மாநில தலைவர்களால் தான் பாஜக சறுக்கி கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்