மீண்டும் ஜார்கண்ட் முதல்வராகும் ஹேமந்த் சோரன்.! இன்று மாலை பதவியேற்பு.!
ராஞ்சி: இன்று மாலை 5 மணிக்கு ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்க உள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நில மோசடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி கடந்த வாரம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன். அமலாக்கத்துறை சார்பில் சோரனுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது.
இதனை அடுத்து மீண்டும் முதல்வராகும் முனைப்பில் ஹேமந்த் சோரன் முயற்சித்து வருகிறார். அவரது கட்சியினரும், கூட்டணி கட்சி தலைவர்களும் ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் முதற்கட்ட நடவடிக்கையாக சம்பாய் சோரன் தனது முதலமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
இதனை அடுத்து ஹேமந்த் சோரனை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்து இருந்தார். இன்று பகல் 1 மணியளவில் ஹேமந்த் சோரன் மற்றும் மாநில கூட்டணி கட்சி தலைவர்களுடன் ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகை சென்று பதவியேற்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தற்போது வெளியான தகவலின் படி ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 5 மணி அளவில் ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்க உள்ளார் என ANI நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.