‘பிரதமர் மோடி இதுவரை மணிப்பூர் செல்லாதது ஏன்?’ – ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

Jairam Ramesh

புது டெல்லி : பல நாடுகளுக்கு பயணம் செய்யும் பிரதமர் மோடி, மணிப்பூருக்கு மட்டும் இதுவரை செல்லவில்லை என ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி, மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டு வர அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். கலவரம் தொடர்பாக இதுவரை 1100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் மணிப்பூரில் வன்முறை நிகழ்வுகள் குறைந்து வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்நிலையில், மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி பேசியது முற்றிலும் உண்மைக்கு புறம்பாக இருக்கிறது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “உயிரியல் ரீதியாக பிறக்காத நமது பிரதமர், நாடாளுமன்றத்தில் மணிப்பூர் குறித்து பேசியது அனைத்தும் முற்றிலும் உண்மைக்கு புறம்பாக இருக்கிறது.

கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதி முதல் மணிப்பூர் மாநிலம் எரிந்து கொண்டிருக்கிறது. அங்கு தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். பிரதமர் மோடி இதுவரை மணிப்பூர் செல்லாதது ஏன்? இன்று மாநிலங்களவையில் வேறு வழியின்றி மணிப்பூர் பற்றி பேசியுள்ளார்.

சுமார் 16 மாதங்கள் கடந்த பிறகும் பிரதமர் மணிப்பூருக்கு செல்லவோ, மணிப்பூர் முதல்-மந்திரியை சந்திக்கவோ அல்லது மணிப்பூரில் உள்ள அரசியல் கட்சியினரை சந்திக்கவோ இல்லை. பிரதமர் ஏன் இன்னும் வரவில்லை என மணிப்பூர் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். பிரதமர் மோடி பல நாடுகளுக்கு பயணம் செய்கிறார், தன்னை ‘கடவுளின் பிரதிநிதி’ என்று கூறிக்கொள்பவர் மணிப்பூருக்கு மட்டும் செல்ல மறுக்கிறார்.

தேர்தல் பிரசாரத்தின்போது திரிபுராவுக்கும், அசாமிற்கும் சென்றார். இந்த 2 மாநிலங்களுக்கு இடையில்தான் மணிப்பூர் இருக்கிறது. மோடி நினைத்திருந்தால் அங்கு சென்றிருக்கலாம், ஆனால் அவர் செல்லவில்லை.” இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ்  கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்