மீண்டும் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.? ஏற்பாடுகள் தீவிரம்…
ஜார்கண்ட்: அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் போதிய ஆதாரமில்லை என ஜாமினில் வெளியில் வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நிலமோசடி புகாரின் கீழ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றகாக கூறி அமலாக்கத்துறை அப்போது, ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை கைது செய்தது. பின்னர் அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த ஹேமந்த் சோரனுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கடந்த வாரம் ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது.
தான் கைது செய்யப்படுவதற்கு முன்னதாகவே தனது முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். மேலும், அந்த பதவி ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரனுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஜாமீனில் இருந்து வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்க முனைப்பு காட்டி வருகிறார் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதற்கான முக்கிய பேச்சுவார்த்தை இன்று ஹேமந்த் சோரன் வீட்டில் நடைபெற்றதாகவும் உடன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஜார்கண்ட் பொறுப்பாளர் குலாம் அகமது மிர், மாநில தலைவர் ராஜேஷ் தாக்கூர், ஹேமந்த் சோரனின் மனைவியும் எம்எல்ஏவுமான கல்பனா சோரன், ஜார்கண்ட் மாநில முதல்வர் சம்பாய் சோரன் உள்ளிட்ட மூத்த கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் என கூறப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்ட முடிவில், ஜார்கண்ட் மாநில முதல்வராக மீண்டும் ஹேமந்த் சோரன் நியமிக்க ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர், கூட்டணி தலைவர்கள் ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இன்று மாலையில் கூட சம்பாய் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை ஜார்கண்ட் மாநில ஆளுநரிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளது என்றும் செய்திகள் வெளியகி வருகின்றன.