அசாமை புரட்டிப்போட்ட மழை, வெள்ளம்.. 38 பேர் பலி.!
அசாம் வெள்ளம்: அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 38 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வெள்ளத்தில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) தகவலின்படி, டின்சுகியா மாவட்டத்தில் 2 இறப்புகளும், தேமாஜி மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்தனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையை 38 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலர் பாதுகாப்பான இடங்கள், மேட்டு நிலங்கள், பள்ளிக் கட்டிடங்கள், சாலைகள், பாலங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் நேமாதிகாட், தேஜ்பூர், குவஹாத்தி மற்றும் துப்ரி ஆகிய இடங்களில் அபாய அளவைத் தாண்டி பாய்கிறது. இந்நிலையில், உள்ளூர் நிர்வாகம், ராணுவம், துணை ராணுவப் படைகள், SDRF மற்றும் சர்க்கிள் அலுவலகத்தின் மீட்புக் குழுக்கள் பல இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த செவ்வாயன்று மாநிலத்தில் வெள்ளம் நிலைமை மிகவும் மோசமாக மாறியுள்ளது. 28 மாவட்டங்களில் சுமார் 11.34 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொத்தம் 489 நிவாரண முகாம்கள் மற்றும் விநியோக மையங்களை அரசு அமைத்துள்ளது. அங்கு கிட்டத்தட்ட 2.87 லட்சம் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.