எழுதி வச்சுக்கோங்க இறுதிப்போட்டியில் விராட் கோலி சதம் விளாசுவாரு! முன்னாள் கிரிக்கெட் வீரர் கணிப்பு!
விராட் கோலி : டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இதுவரை தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வகையில் விளையாடவில்லை என்பதால் அவருடைய பேட்டிங் பற்றி விமர்சனங்கள் எழுந்து வருகிறது. விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இன்று நடைபெறும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அசத்தலாக விளையாடுவார் என அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் விராட்கோலி 100 ரன்கள் அடிப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மான்டி பனேசார் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியதாவது ” டி20 உலகக்கோப்பை 2024 போட்டியில் இந்திய அணி தான் கோப்பையை வெல்லும் என்று நான் நினைக்கிறேன்.
விராட் கோலி பார்ம் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வந்துகொண்டு இருப்பதை நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அவர் ஒரு உலக தரம் வாய்ந்த தரமான கிரிக்கெட் வீரர் இது நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. 15 வருடங்கள் கிரிக்கெட் விளையாடும்போது, ஃபார்ம் ஒரு பிரச்சனையாக இருக்காது. என்னை பொறுத்தவரை அவர் நன்றாக ஃபார்மில் தான் இருக்கிறார்.
இதுவரை அவர் ரன்கள் அடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அனைத்திற்கும் சேர்த்து கண்டிப்பாக வரும் இந்த இறுதிப்போட்டியில் அதிரடியாக விளையாடுவார். கண்டிப்பாக அவர் 100 ரன்கள் அடிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” எனவும் மான்டி பனேசார் கூறியுள்ளார். இதனையடுத்து, விராட் கோலி நன்றாக விளையாடவேண்டும் என ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.