மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் தலைநகர்.. டெல்லி அரசு முக்கிய ஆலோசனை.!

Delhi Rain

டெல்லி: தென்மேற்கு பருவமழையானது மேற்கு, கிழக்கு ராஜஸ்தான், ஹரியானா மாநிலத்தின் சில பகுதிகள் மற்றும் டெல்லி மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

நேற்றிரவு பெய்ய தொடங்கிய கனமழையால் டெல்லி மாநகர் முழுவதும், பல்வேறு பகுதிகள் மழைநீரால் மூழ்கியுள்ளது. இன்று அதிகாலை 2.30 மணி முதல் 5.30 மணி வரையில் மூன்று மணி நேரத்தில் சுமார் 150 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என மழையளவு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 228 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இந்த கனமழையின் காரணமாக டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1 பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழப்புகளும் நேர்ந்தன. மேலும், டெல்லி விமான நிலையத்தில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. கனமழை காரணமாக விமான சேவை, ரயில் சேவை, டெல்லி மெட்ரோ சேவை ஆகிய பாதிக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக டெல்லி மின்டோ பாலம், மூல்சந்த், வினோத் நகர் மற்றும் அரவிந்தோ சாலை போன்ற பகுதிகளில் தேங்கிய மழைநீரில் பல வாகனங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மிண்டோ பாலமானது, டெல்லி அரசால், மழைநீர் தேங்கும் ‘ஹாட் ஸ்பாட்’ பகுதி பட்டியலில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் இந்த கனமழை பற்றி கூறுகையில், அதிகாரிகள் மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, வெள்ளத்தைத் தடுக்க மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.

மேலும் , கடந்த காலத்தை விட மீட்புப்பணிகள் விரைவாக தொடங்கப்பட்டுள்ளன. இது பருவமழையின் முதல் மழை. தற்போது மழைநீர் பாதிக்கப்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அனைத்து துறை அதிகாரிகளும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.  பாதிப்பு ஏற்பட்ட அனைத்து இடங்களிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று மேயர் ஓபராய் கூறினார்.

கனமழை மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க டெல்லி அரசு இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லி தலைமைச் செயலகத்தில் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், அனைத்து துறைகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு தொடங்கிய பருவமலையானது இன்னும் சில தினங்கள் தொடரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்