ஒய்எஸ்ஆர்சிபி அலுவலகத்தை ஜேசிபியை வைத்து சுக்குநூறாக்கிய அதிகாரிகள் ..!
ஒய்எஸ்ஆர்சிபி: ஆந்திர மாநிலத்தில் உள்ள, குண்டூர் மாவட்டம் தாடே பள்ளி அடுத்த சீதா நகரத்தில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான படகு இல்லம் (Boat House) இருந்தது. கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் அந்த படகு இல்லம் இடித்து தள்ளப்பட்டது.
மேலும், இடிக்கப்பட்ட படகு இல்லத்தை குறைந்த குத்தகை வாடகைக்கு எடுத்து அங்கு பிரம்மாண்ட முறையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகம் கட்டும் பணி நடந்து வந்தது.
இந்த நிலையில் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலக கட்டுமான பணிக்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனால், அப்போது கட்சி அலுவலகத்தை இடிக்க கோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இருப்பினும், இன்று அதிகாலை 5.30 மணி அளவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ராட்சச ஜேசிபியை (JCB) கொண்டு வந்து ஒய்.எஸ்.ஆர். கட்சி அலுவலகத்தை இடித்து தகர்த்தனர். இது குறித்து தகவல் தெரிந்ததும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஏராளமனூர் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர்.
மேலும், அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த ஏராளமான போலீசார்கள்
ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரை தடுத்து நிறுத்தினார்கள். மேலும், அங்கு குவிந்த ஓய்.எஸ்.ஆர் கட்சியினர்கள், ஆந்திர முதலமைச்சரான சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.
அதை தொடர்ந்து, இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததுடன் தனியார் மண்டபங்களில் அடைத்தனர். இதனால், அதிகாலையில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி அலுவலகம் இடிக்கப்பட்ட சம்பவம் குண்டூரில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.