கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள்.? கள்ளக்குறிச்சி ஆட்சியர் மறுப்பு.!
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் அருந்தி 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி வந்த நேரத்தில் அதனை மாவட்ட ஆட்சியர் ஷ்ர்வன் குமார் மறுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதிக்கு அருகே உள்ள கருணாபுரத்தில் சந்தேகத்திற்கிடமாக 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியை சேர்ந்த சுரேஷ், பிரவீன், ஜெகதீஸ், சேகர் ஆகியோர்உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேற்கண்ட 4 பேரும் கள்ளச்சாராயம் அருந்தியதால் தான் உயிரிழந்தனர் என பரவலான குற்றசாட்டுகளை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் முன்வைத்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், மாநில அரசு கள்ளச்சாராயம் ஒழிப்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இப்படியான சூழலில், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஓர் செய்தி குறிப்பு வெளியானது. அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு அருகே உள்ள கருணாபுரத்தைச் சேர்ந்த 4 நபர்கள் கள்ளச்சாராயம் அருந்தி இறந்துவிட்டதாக சமூகவலைதளங்கள் மற்றும் செய்தி தொலைகாட்சிகளில் செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் விசாரணை நடைபெற்று, உடற்கூராய்வுமூலம் உண்மை நிலவரம் அறியும் வரை , இதுபோன்ற செய்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டது.
மேலும், இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தனியார் செய்தி நிறுவனத்திற்கு விளக்கம் அளிக்கையில், கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த 4 பேரும் கள்ளச்சாராயம் அருந்தியதால் தான் உயிரிழந்தனர் என போலியான செய்திகள் வெளியாகி வருகின்றன. உயிரிழந்த ஒருவற்கு குடிபழக்கம் இல்லை. அவர்கள் வயிற்று வலி, வலிப்பு உள்ளிட்ட மருத்துவ கரணங்கள் இருக்கிறது. உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கள்ளச்சாராயத்தால் தான் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்தது என மருத்துவர்களோ, காவல்துறையோ இன்னும் உறுதிபட கூறவில்லை என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.