அதிர்ச்சி!! சாக்லேட் சிரப்பில் இறந்த போன எலி – வைரல் வீடியோ!
மும்பை : ஆன்லைனில் ஆர்டர் செய்த ஹெர்ஷியின் சாக்லேட் சிரப் பாட்டிலில் இறந்த போன எலியை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பம்.
அண்மையில் மும்பை மருத்துவர் ஒருவர் ஐஸ் க்ரீமில் மனிதரின் கைவிரலும், நொய்டா பெண் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் டப்பாவில் பூரானும், ஹாஸ்டல் விடுதி உணவில் பாம்பின் வாலும் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற மற்றொரு சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வகையில், மும்பையில் வசித்து வரும் பிரமி ஸ்ரீதர் என்பவர், ஆன்லைன் செயலியான Zepto-இலிருந்து ஆர்டர் செய்யப்பட்ட ஹெர்ஷியின் சாக்லேட் சிரப்பின் பாட்டிலில் இறந்த எலியின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். பிரவுனி கேக்குடன் சாப்பிட வாங்கிய சிரப்பின் டப்பாவின் அடி பகுதி மிகவும் கெட்டியாக இருப்பது போல் தெரிந்ததும் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த வீடியோவில், சாக்லேட் சிரப்பின் பாட்டிலை தொறந்து வெளியே கொட்டுகையில், அதில் சிறிய முடிகள் இருப்பதை அவர்கள் கவனித்தனர். அதன் பிறகு இறந்த எலி வெளியே விழுகிறது. பின்னர், அது என்னவேன்று உறுதி செய்வதற்காக ஒரு மனிதன் மரக் கரண்டியால் தண்ணீருக்கு அடியில் இறந்த எலியைக் கழுவுவதையும் காணலாம்.
வீடியோவை பகிர்ந்து அந்த பயனர், Hershey’s சாக்லேட் பானத்திற்குள் செத்த எலி இருந்ததாகக் கூறியுள்ளார். இதை அறியாமல் சாப்பிட்ட 3 பேரில் ஒருவரது உடல்நிலை பாதித்ததாகவும் தெரிவித்தார்.
View this post on Instagram
இதனை பார்த்த சமூக ஊடக பயனர்கள் கோபமடைந்தனர். அந்த பதிவுக்கு ஒரு பயனர் “இதற்காக நீங்கள் அவர்கள் மீது (ஹெர்ஷே) வழக்குத் தொடரலாம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு புகாரளிக்கலாம்” என்று கூறினார். சிலர் “இது தயாரிப்பாளரின் பிரச்சனை. தயாரிப்பு அதன் முத்திரையுடன் வந்திருந்தால், இதற்கு Zepto பொறுப்பேற்காது” என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
பிரமி இன்ஸ்டாகிராம் பதிவுக்கு ஹெர்ஷே நிறுவனம் பதிலளித்துள்ளது, “வணக்கம், இதைப் பார்த்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம். பாட்டிலில் இருந்து UPC மற்றும் உற்பத்திக் குறியீட்டை 11082163 என்ற குறிப்பு எண்ணுடன் எங்களுக்கு அனுப்பவும், எங்கள் குழு உறுப்பினர்களில் ஒருவர் உங்களுக்கு உதவ முடியும்” என்று குறிப்பிட்டு இருந்தனர்.