மாணவர்கள் கையில் கயிறு கட்ட கூடாது என எப்படி கூறலாம்.? எச்.ராஜா கடும் விமர்சனம்.!
சென்னை: மாணவர்கள் கையில் கயிறு கட்டக்கூடாது, நெற்றியில் திலகமிட கூடாது என்ற நீதிபதி சந்துருவின் பரிந்துரையை தமிழக அரசு ஏற்க கூடாது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி , இன ரீதியிலான வேறுபாடுகளை களைய, உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் விசாரணை குழுவை தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நியமித்தது.
நீதியரசர் சந்துரு தலைமையிலான ஒருநபர் விசாரணைக் குழு தங்கள் விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தாக்கல் செய்தனர். அதில், மாணவர்கள் கையில் வண்ண கயிறு கட்டக்கூடாது. நெற்றியில் திலகம் வைக்க கூடாது. சைக்கிளில் சாதியை குறிப்பிடும் வகையில் வண்ண பெயிண்ட் பூசக்கூடாது. பள்ளி கல்லூரிகளில் சாதி பெயர் நீக்க வேண்டும் என பல்வேறு பரிந்துரைகள் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தன.
இந்த பரிந்துரைகள் குறித்து இன்று தமிழக பாஜக தலைமையில் சென்னையில் ஓர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக நிர்வாகிகள் எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை முழுதாக எதிர்ப்பதாக கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், நீதிபதி சந்துரு தமிழக அரசுக்கு குறிப்பிட்டுள்ள பரிந்துரைகள் ஹிந்துக்களுக்கு எதிரானவை. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நெற்றியில் திலகம் வைக்க கூடாது என்றும் கையில் கயிறு கட்ட கூடாது என்றும் அவர்கள் எப்படி கூறலாம்.? அதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நீதிபதி சந்துரு தலைமையிலான பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்க கூடாது என நாங்கள் (பாஜக) தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என எச்.ராஜா சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.